அண்மை செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் தள்ளி வைப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற இருந்தது. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா,இத்தாலி,ஈரான்,ஸ்பெயின்,ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. அத்துடன் தற்போது வரை உலக அளவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இந்த ஒலிம்பிக் தொடர் குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாட்ச் ஆகியோர் கலந்து உரையாடினர். இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்க முடிவு எடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் அபே, “தற்போது இருக்கும் சூழ்நிலையில் வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த முடிவு ஜப்பான் நாட்டிற்கு பெரிய பொருளாதார நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் போட்டியை நடத்தும் குழுவிற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். எனினும் பல உலக நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற்றாலும் 'டோக்கியோ 2020' என்றே அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
124ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1916ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்ஸ் முதல் உலக போரால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் இரண்டாம் உலகப் போரால் ரத்து செய்யப்பட்டது.