TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

“கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகவில்லை என்றால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகும்”- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்

“கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகவில்லை என்றால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகும்”- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்
X
By

Ashok M

Published: 26 Feb 2020 5:09 PM GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் என்று செய்திகள் பரவி வந்தன.

ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சீன வீரர்கள் மற்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில் அதிக சிக்கல்கள் தற்போது எழுந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பரவிய செய்திகள் உண்மையாக இருக்கும் என்று சிலர் நம்ப ஆரம்பித்து விட்டனர்.

டோக்கியோ ஒலிம்பிக்

இதற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நீண்ட கால உறுப்பினரான டிக் பவுண்ட் டோக்கியோ ஒலிம்பிக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “தற்போது இருக்கும் கொரோனா வைரஸ் நிலை நீடித்து வந்தால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். ஏனென்றால் இந்த ஒலிம்பிக் தொடரில் அதிகளவில் வீரர், வீராங்கனைகள பங்கேற்பார்கள். அத்துடன் அவர்கள் தங்கும் இடம், உணவு பாதுகாப்பு மற்றும் இப்போட்டி தொடர்பாக செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் என அனைவரின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020

ஆகவே என்னைப் பொருத்தவரை வரும் மே மாதம் இறுதி வரை இருக்கும் சூழ்நிலை பார்த்த பின்பு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை வெளியாகிவரும் பல்வேறு செய்திகளின்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஐரோப்பிய கண்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழல் சரியாகாத பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உண்டாகும். அவ்வாறு ரத்து செய்யப்பாட்டால் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாவது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 1940ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாம் உலக போர் மற்றும் சீனா-ஜப்பான் சண்டையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it