அண்மை செய்திகள்
நாளை முதல் விளையாட்டு பயிற்சிகள் தொடங்க அனுமதி அளித்த தெலுங்கானா அரசாங்கம்
இந்தியாவின் பேட்மிண்டன் வீரர்களுக்கு ஒரு நற்செய்தியாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த பயிற்சி கூடங்களை நாளை முதல் உபயோகிக்க தெலுங்கானா அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பி வி சிந்து, சாய்னா நெஹ்வால் உட்பட இந்தியாவின் முன்னனி வீரர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் இந்திய தேசிய பயற்சியாளரான கோபிசந்த் அவர்களிடம் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவு, அந்த மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான ஶ்ரீநிவாஸ் கவுட் ஆகியோருக்கிடையான கலந்துரையாடலுக்கு பின்னர் எடுக்கப்பட்டது. இதன்மூலம் வீரர்கள் பல விளையாட்டு கூடங்களில் வெவ்வேறு நேரம் மற்றும் நாட்களில் பயிற்சி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் விளையாட்டு தொடர்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
[embed]https://twitter.com/sikkireddy/status/1289549992751898624[/embed]
இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மொகம்மது அசாருத்தின், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி, தெலுங்கானா ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஜெயேஷ் ரஞ்சன் மற்றும் தெலுங்கானா பேட்மிண்டன் சங்கத் துணை தலைவர் சாமூன்டேஸ்வரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து உள்விளையாட்டு அரங்கங்களும் தக்க பாதுகாப்பு அமைப்புகளுடன் இயங்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் புதிய விளையாட்டு கொள்கை ஏற்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை திறம்பட செயல்படுத்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது யோசனைகளை கூற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.