அண்மை செய்திகள்
ஐசிசி சர்வதேச டி-20 பேட்டிங் தரவரிசை முதல் இடத்தில் இந்திய வீராங்கனை ஷாபாலி வெர்மா

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் நான்கு போட்டிகளையும் வென்ற இந்திய அணி, அசத்தலாக அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது
இந்த சீசனில், இந்தியாவின் நம்பிக்கை பேட்ஸ்வுமனாக விளையாடி வருகிறார் 16 வயதேயான ஷாபாலி வெர்மா. 2020 டி-20 உலகக் கோப்பையில் இதுவரை, 161 ரன்கள் எடுத்துள்ளார்.
இதனால், ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி-20 பேட்டிங் தரவரிசையில் ஷாபாலி முதல் இடத்தை பிடித்துள்ளார். 761 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார் ஷாபாலி. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் உள்ளார். மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பிடித்துள்ளார்.
சர்வதேச டி-20 பேட்டிங் தரவரிசை முதல் பத்து இடங்களில், மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். 701 புள்ளிகளுடன் ஸ்மிரிதி மந்தானா ஆறாவது இடத்திலும், 658 புள்ளிகளுடன் ஜெமிமா ராட்ரிக்ஸ் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்
ஷாபாலியின் பேட்டிங் குறித்து பேசியுள்ளார் மகளிர் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். “இந்திய அணிக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்க கூடியவர் ஷாபாலி. அவரது பேட்டிங்கை நாங்கள் தடுக்க மாட்டோம். இந்திய அணிக்காக விளையாடுகிறார், எப்போதும் சிறப்பான ஆட்டத்தை தரவே விரும்புகிறார். அவரை போல ஒரு வீராங்கனை அணிக்கு மிகவும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.