வெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2020
Home அண்மை செய்திகள் பிஎஸ்ஏ உலக கோல்ட் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் போராடி தோல்வியடைந்த சவுரவ் கோஷல்

பிஎஸ்ஏ உலக கோல்ட் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் போராடி தோல்வியடைந்த சவுரவ் கோஷல்

உலக ஆண்கள் ஸ்குவாஷ் தரவரிசையில் டாப்-10ல் இருக்கும் ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே

Published:

இந்தியாவின் முதல் நிலை ஸ்குவாஷ் வீரரான சவுரவ் கோஷல் லண்டனில் நடந்து வரும் பிஎஸ்ஏ கோல்ட் நிலை தொடரின் காலிறுதியில் ஸ்குவாஷ் ஜாம்பவானும் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எகிப்தைச் சேர்ந்த முகமது எல் சோர்பாகியிடம் கடுமையான போராட்டத்திற்கு பின் தோல்வியடைந்தார். அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி முதல் செட்டினை 13-11 என்ற கணக்கில் கைப்பற்றினார் சவுரவ். ஆனால் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்து உலகின் சிறந்த வீரர் நான்தான் என்று மீண்டும் ஒருமுறை நிருபித்தார் எல் சோர்பாகி. வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சவ்ரவும் விட்டுக்கொடுக்காமல் போராட ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதிவரை பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் தனது அனுபவத்தினை உபயோகித்து 12-10 என்ற கணக்கில் கைப்பற்றினார் எல் சோர்பாக். இதன்மூலம் 11-13, 11-7, 12-10 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் முகமது எல் சோர்பாகி.

சவ்ரவ் கோஷல்

இதற்கு முன்னதாக நடந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய சவுரவ் உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை சேர்ந்த சைமன் ரோஸ்னரை வீழ்த்தியது குறிப்படதக்கது. இந்த ஆட்டத்தில் 13-11, 7-11, 11-4 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார் சவுரவ் கோஷல். உலக அரங்கில் இந்தியாவிற்காக பல வருடங்களாக சிறப்பாக ஆடி வருபவர் சவுரவ் கோஷல் ஆகும். உலக ஆண்கள் தரவரிசையில் டாப்-10ல் இருக்கும் ஒரே வீரர் இவர் மட்டுமே. 2018 ஏசியன் கேம்ஸ் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார்.