அண்மை செய்திகள்
பிரஞ்ச் ஓபன் 2020: இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிரஜ்ணேஷ் குன்னேஸ்வரன்
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரஞ்ச் ஓபன் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் பாரிஸில் இன்று முதல் தொடங்கியது. எப்பொழுதும் மே மாதத்தில் நடைபெறும் இந்த தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கிய ஆட்டங்களில் மூன்று இந்திய வீரர்கள் பங்கேற்றனர். முதலில் விளையாடிய இந்தியாவின் முன்னணி வீரரான பிரஜ்ணேஷ் குன்னேஸ்வரன் டர்க்கியை சேர்ந்த செய் இல்கேலினை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பிரஜ்ணேஷ் தன்னை எதிர்த்து ஆடிய வீரருக்கு எந்தவித வாய்ப்பும் குடுக்காமல் 6-3, 6-1 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவினை சேர்ந்த அலெக்சாண்டர் ஊகிக்கினை எதிர்கொள்வார் பிரஜ்ணேஷ்.
அடுத்த ஆட்டத்தில் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் சுமித் நகால் ஜெர்மனியை சேர்ந்த டஸ்டின் பிரவுனினை எதிர்கொண்டார். ஏமாற்றம் அளிக்கும் விதமாக 6-7, 5-7 என்ற கணக்கில் நேர் செட்களில் தோல்வியடைந்தது தொடரிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதனும் பெரிதும் சோபிக்காமல் 5-7, 2-6 என்ற கணக்கில் நேர் செட்களில் பிரான்ஸை சேர்ந்த இளம் வீரரான கிரிஸ்டன் லமசைனிடம் தோல்வி அடைந்தார்.
நாளை தொடங்கவிருக்கும் மகளிருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில், இந்தியாவினை சேர்ந்த அங்கிதா ரெய்னா செர்பியாவினை சேர்ந்த ஜோவனா ஜோவிக்கினை எதிர்கொள்கிறார்.