வெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2020
Home அண்மை செய்திகள் கொரோனா வைரஸ்: பி.வி.சிந்து 10லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி!

கொரோனா வைரஸ்: பி.வி.சிந்து 10லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான நிவாரணத்திற்கு தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பி.வி.சிந்து நிதியுதவி அளித்துள்ளார்.

Published:

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதேபோல இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 

தற்போது வரை இந்தியாவில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகளும் எங்கும் நடைபெறவில்லை. அத்துடன் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளும் கொரோனாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பல பிரபலங்களும் அந்தந்த மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களது நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். 

 இந்தச் சூழலில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு தனது நிவாரண நிதியை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் விதமாக தெலங்கானா மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நான் தலா 5 லட்சம் ரூபாயை அளித்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

பி.வி.சிந்துவின் இந்தச் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. முன்னதாக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசியை நிவாரணமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு அளித்திருந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது பி.வி.சிந்துவும் நிவாரணம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.