அண்மை செய்திகள்
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக ஹர்மீத் சாம்பியன்

81ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் சத்தியன், சரத் கமல், ஹர்மீத் தேசாய், சௌமியாஜித் கோஷ் மானவ் தாக்கர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்தியன் அல்லது சரத் கமல் தேசிய சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இதற்கு மாறாக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இவர்கள் இருவருமே தகுதி பெறவில்லை.
அனுபவ வீரரும் 9 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவருமான சரத் கமல் காலிறுதிப் போட்டியில் சௌமியாஜித் கோஷிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அதேபோல மற்றொரு முன்னணி வீரரான சத்தியன் அரையிறுதிப் போட்டியில் மானவ் தாக்கரிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் நேற்று ஹர்மீத் தேசாய் மற்றும் மானவ் தாக்கர் ஆகிய இருவரும் இறுதிப் போட்டியில் மோதினர். இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் புள்ளிகளை எளிதில் விட்டு தராமல் சிறப்பாக விளையாடினர். பல முறை ஆட்டத்தில் பின்தங்கி இருந்த மானவ் தாக்கர் மீண்டும் திரும்பி வந்து கேம்மை கைப்பற்றினார். இரு வீரர்களும் 3 கேம்களை வென்றதால் வெற்றியாளரை தீர்மானிக்க 7ஆவது கேம் நடத்தப்பட்டது.
இதில் சிறப்பாக விளையாடிய ஹர்மீத் தேசாய் மானவ் தாக்கரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஹர்மீத் தேசாய் 11-4,11-13,14-12,9-11,11-8,5-11,11-5 என்ற கணக்கில் மானவ் தாக்கரை தோற்கடித்து முதல் முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை ஹர்மீத் தேசாய் வென்றார்.
இந்த வெற்றி குறித்து ஹர்மீத் தேசாய், "மானவ் அரையிறுதியில் சத்தியனை தோற்கடித்தார். அவரின் தற்போதைய ஃபார்மை பார்த்தப் போது நான் நிச்சயம் இறுதிப் போட்டியில் தோற்று விடுவேன் என நினைத்தேன். எனினும் கடைசியாக நடைபெற்ற கேம்மில் அவர் சற்று தடுமாறியது எனக்கு சாம்பியம் பட்டம் வெல்ல முக்கியமான வாய்ப்பாக அமைந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
மகளிர் பிரிவில் சுடிர்தா முகர்ஜி சாம்பியன்:
அதேபோல மகளிர் பிரிவில் சுடிர்தா முகர்ஜி சிறப்பாக விளையாடி தனது இரண்டாவது தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் இறுதிப் போட்டியில் கிருத்விகா சின்ஹா ராயை 11-4,11-5,11-8,11-4 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.
மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை மோனிகா பட்ரா பங்கேற்கவில்லை. அதேபோல மற்றொரு முக்கிய வீராங்கனையான அர்ச்சனா காமாத் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனால் ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற சுடிர்தா முகர்ஜி மீண்டும் இந்த முறை சாம்பியம் பட்டம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.