அண்மை செய்திகள்
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: 18ஆவது முறையாக பட்டம் வென்றார் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா

77வது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு, சரியாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா டெல்லியின் தன்வி கண்ணாவை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் முதல் கேமை ஜோஷ்னா 8-11 என்ற கணக்கில் இழந்தார்.எனினும் அதன்பின்னர் சூதாரித்து கொண்ட ஜோஷ்னா அடுத்த மூன்று கேம்களை 11-6,11-4,11-7 என்ற கணக்கில் வென்றார்.
இதன்மூலம் 8-11,11-6,11-4,11-7 என தன்வி கண்ணாவை வீழ்த்தி 18ஆவது முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு தேசிய ஸ்குவாஷ் வரலாற்றில் அதிகபட்சமாக புவனேஷ்வரி குமாரி 16 முறை வென்று இருந்தார். அந்தச் சாதனையை ஜோஷ்னா கடந்த முறை தேசிய பட்டம் வென்ற போது முறியடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் களமிறங்கிய முன்னணி வீரரான சவுரவ் கோஷல் மகாராஷ்டிராவின் அபிஷேக் பிரதானை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சவுரவ் கோஷல் 11-6,11-5,11-6 என்ற கணக்கில் அபிஷேக் பிரதானை வீழ்த்தினார். இதன்மூலம் சவுரவ் கோஷல் தனது 13ஆவது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார்.
ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இந்தத் தொடரில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளிலிருந்து ஆசிய குழு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது.
இதனால் இந்தத் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஆசியக் குழு ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.