அண்மை செய்திகள்
கிரிக்கெட்டர் மித்தாலியாக நடிகை தாப்ஸி - வெளியானது ‘சபாஷ் மித்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இத்திரைப்படத்தில் கிரிக்கெட்டர் மித்தாலியாக நடிகை தாப்ஸி ஒப்பந்தமானார். கடந்த சில வருடங்களாகவே பாலிவுட்டில் பயோபிக் திரைப்படங்கள் டிரெண்டாகி வருகிறது. எம்.எஸ் தோனி வரிசையில் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக் இப்போது தயாராகி வருகிறது. ‘சபாஷ் மித்து’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் ராகுல் தோலாக்கியா இயக்கும் இத்திரைப்படம், 2021-ம் ஆண்டு பிப்ரவரி
மாதம் வெளியாக உள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மித்தாலி ராஜின் பிரபல
பேட்டிங் ஸ்டைலில் இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை தாப்ஸி இடம்
பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீராங்கனையான மித்தாலி ராஜ், 1999-ம் ஆண்டு தனது 16 வயதில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் அசத்தி வரும் மித்தாலி, இரண்டு முறை மகளிருக்கான 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்திச் சென்றுள்ளார்.
சிறந்த பேட்ஸ்வுமன், கேப்டன் என இந்திய மகளிரின் கிரிக்கெட் நாயகி இவர். 2019
செப்டம்பர் மாதம் டி-20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2019
அக்டோபர் மாதம், 36 வயதான மித்தாலி ராஜ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 20
ஆண்டுகளை நிறைவு செய்த முதல் பெண் கிரிக்கெட்டரானார்.