அண்மை செய்திகள்
கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ்: 15 பதக்கங்களுடன் 9ஆவது இடத்தை பிடித்தது சென்னை பல்கலைக்கழகம்

மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் முதல் முறையாக நடத்தப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் பங்கேற்றன. தமிழ்நாட்டிலிருந்தும் பல்கலைக் கழகங்கள் இப்போட்டிகளில் பங்கேற்றன. இந்தப் போட்டி கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கி இன்று வரை ஒடிசாவில் நடைபெற்றது.
கடைசி நாளான இன்று தமிழ்நாட்டின் சென்னை பல்கலைக்கழகம் மகளிர் டேபிள் டென்னிஸ் குழுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த யாஷினி,சுருதி,ஷீலா ஜேக்கப்,பவித்ரா டேபிள் டென்னிஸ் குழுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
தங்கப் பதக்கம் வென்ற ஆதர்ஷ் ராம்
அதேபோல நேற்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதலில் சென்னை பல்கலைக்கழக்கத்தின் ஆதர்ஷ் ராம் 2.14 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் முதல் கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மொத்தம் 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 15 பதக்கங்களை வென்றது. அத்துடன் பதக்கப் பட்டியலில் சென்னை பல்கலைக்கழகம் 9ஆவது இடத்தையும் பிடித்தது.
சென்னை பல்கலை கழகத்திற்கு அடுத்தப்படியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் (மொத்தம் 7) 21ஆவது இடத்தை பிடித்தது. ஒரு தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் பெரியார் பல்கலைக் கழகம் 40ஆவது இடத்தை பிடித்தது. அதேபோல ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் திருச்சியின் பாரதிதாசன் பல்கலைக் கழகம் 50ஆவது இடத்தை பிடித்தது.
100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் தங்கம் வென்ற கதிரவன் மற்றும் வெள்ளி வென்ற கார்த்திகேயன்
இந்த கேலோ இந்தியா கேம்ஸின் சிறப்பு அம்சமாக கருதப்பட்ட ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் தமிழ்நாட்டின் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கதிரவன் முதலிடம் பிடித்தார். இவர் 10.68 விநாடிகளில் ஓடி முதலிடத்தை பிடித்தார். அத்துடன் வெள்ளிப் பதக்கமும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு கிடைத்தது. இவர் கோயம்பத்தூர் பல்கலைக் கழகம் சார்பில் இப்போட்டியில் பங்கேற்றார்.
முதல் முறையாக நடைபெற்ற இந்த யுனிவர்சிட்டி கேம்ஸ் போட்டியில் பஞ்சாப் பல்கலைக் கழகம் 17 தங்கம் உட்பட 46 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை 17 தங்கப் பதக்கங்களுடன் 36 பதக்கங்கள் வென்ற சாவித்ரிபாய் பூலே பல்கலைக் கழகம் பிடித்தது. மூன்றாவது இடத்தை பட்டியாலாவை சேர்ந்த பஞ்சாபி பல்கலைக் கழகம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.