ஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இந்தத் தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஜீத் சந்திரா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இறுதிப் போட்டியில் சக இந்திய வீரரான மானவ் தாக்கர் விஷாலை 11-6,11-7,13-11 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஓமன் ஓபனின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சரத் கமல், ஹர்மித் தேசாய் அரையிறுதிக்கு தகுதிப் பெற்று இருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஹர்மித் தேசாய் போர்சுகல் நாட்டின் மார்கோஸை எதிர்கொண்டார். அதில் இருவரும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் மிகவும் பரப்பரப்பாக இருந்தது. இறுதியில் மார்கோஸ் 5-11,11-9,6-11,6-11,11-8,13-11,11-5 என்ற கணக்கில் போராடி வெற்றிப் பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் சரத் கமல் ரஷ்யாவின் கிரிளை எதிர்கொண்டார். இந்தப் போட்டியும் மிகுந்த பரப்பரப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரர் 11-13,11-13, 13-11,11-9,13-11,8-11,11-7 என்ற கணக்கில் வென்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் சரத் கமல் மார்கோஸை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் முதல்நிலை வீரரான மார்கோஸ் முதல் கேமை கைப்பற்றினார். இதன்பின்னர் சுதாரித்து கொண்ட சரத் கமல் அடுத்த மூன்று கேம்களையும் தன்வசப்படுத்தினார். எனினும் ஐந்தாவது கேமை மார்கோஸ் சிறப்பாக விளையாடி எளிதில் வென்றார்.
இதனையடுத்து நடைபெற்ற ஆறாவது கேம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து கொண்டு வந்ததால் ஆட்டம் மிகவும் சூடு பிடித்தது. இருவரும் 10 புள்ளிகளை எடுத்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க இரண்டு புள்ளிகள் இடைவேளை தேவைப்பட்டதால் ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இந்த கேம்மில் கடைசியில் சிறப்பாக விளையாடிய சரத் கமல் 17-15 என்ற கணக்கில் கேமை வென்று அசத்தினார்.
அத்துடன் 6-11,11-8,12-10,11-9,3-11,17-15 என்ற கணக்கில் போட்டியை வென்றார். இதன்மூலம் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரையும் சரத் கமல் கைப்பற்றினார். மேலும் இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் வெண்கலப் பத்தக்கத்தை வென்று அசத்தினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை ஐடிடிஎஃப் தனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி இன்று முடிவடைந்துள்ள ஓமன் ஓபன் தொடரே கடைசி தொடராகும். அடுத்த வாரம் தொடங்க உள்ள தொடர்கள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.