வெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2020
Home அண்மை செய்திகள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ரசிகர்களின்றி நடக்கவிருக்கும் ஐ எஸ் எல் கால்பந்து 2020 இறுதிப்போட்டி

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ரசிகர்களின்றி நடக்கவிருக்கும் ஐ எஸ் எல் கால்பந்து 2020 இறுதிப்போட்டி

ஐ எஸ் எல் கோப்பையை இரண்டு முறை வென்ற சென்னையின் எப் சி மற்றும் ஏ டி கே அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன

Published:

இந்தியன் சூப்பர் லீக்கின் 6ஆவது சீசனின் இறுதியாட்டம் கோவாவிலுள்ள ஃபட்டோர்டா ஸ்டேடியத்தில் நாளை நடக்கவுள்ளது. ஐ எஸ் எல் இரண்டு முறை கோப்பைகளை வென்ற இரண்டு அணிகளான சென்னையின் எப் சி மற்றும் அமர் டோமர் கொல்கத்தா அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதுவதால் அனைவரிடமும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டியினை காண எந்த ரசிகர்களும் அனுமதிக்க பட மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் இது வீரர்கள், ரசிகர்கள் மற்றும் இறுதிப்போட்டியில் பங்களிப்பு தரும் அனைவரின் உடல்நலம் கருதி எடுக்கப்படும் முடிவு என்று கூறினர். இதனால் இரு அணி ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், எல்லாவற்றையும் விட முக்கியம் உடல்நலம் தான் என்பதால் அனைவரும் இந்த அறிவிப்புக்கு உடன்படுவார்கள்.

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பல விளையாட்டு தொடர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகப் பிரபலமான அமெரிக்காவின் என் பி ஏ கூடைப்பந்து தொடரின் நடப்பு சீசன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாடும் வீரர் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டு கால்பந்து தொடர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் தற்போது சில வீரர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கும் கால்பந்து தொடர் தள்ளிவைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்றொரு அறிவிப்பாக அடுத்த ஒரு மாதத்திற்கு அனைத்து டென்னிஸ் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மகளிர் டென்னிஸ் அணி விளையாட இருந்த ஃபெட் கோப்பையின் உலக ப்ளே ஆஃப்ஸ் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.