அண்மை செய்திகள்
ஐபிஎல்: "என் பெயருடன் டிவில்லியர்ஸ் ஆர்சிபி ஜெர்ஸி அணிந்தது என்னை..."- கொரோனா முன்கள் பணியாளர்
பல இடையூறுகளுக்கிடைய ஆரவாரமாக தொடங்கிய ஐபிஎல்ன் 13ஆவது சீசனை சிறப்பாக தொடங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்றது மட்டும் இதற்கு காரணம் அல்ல, அணி நிர்வாகம் எடுத்துள்ள மற்றொரு முடிவும் தான் ஆகும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் பலர் தாமாகவே முன்வந்து நிறைய உதவிகளைச் செய்து வருகின்றார்கள். அவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த சீசன் முழுவதும் தங்களது ஜெர்சியில் "மை கோவிட் ஹீரோஸ்" என்ற வாக்கியத்துடன் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர்களான ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது ஜெர்சிகளில் முறையே பரித்தோஷ் பன்ட் மற்றும் சிம்ரன்ஜீத் சிங் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். தங்களது டிவிட்டர் பக்கத்திலும் இதே மாற்றத்தினை செய்துள்ளனர். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "ஃபீடிங் ஃபிரம் ஃபார் என்ற அமைப்பு மூலம் லாக் டவுனில் தவிக்கும் அனைவருக்கும் உணவு விநியோக சேவை செய்யும் பரிதோஷிற்கு தலை வணங்குகிறேன்". என்று பதிவிட்டுள்ளார் டி வில்லியர்ஸ்.
I salute Paritosh,who started ‘Project Feeding from Far’ with Pooja & fed meals 2 needy during the lockdown. I wear his name on my back this season 2 appreciate their challenger spirit
Share your #MyCovidHeroes story with us#WeAreChallengers #RealChallengers#ChallengeAccepted
— AB de Villiers (@ABdeVilliers17) September 20, 2020
யார் இந்த பரித்தோஷ் பன்ட்?
29 வயதாகும் இவர் மும்பையில் உணவகத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர் தினசரி வேலைகளும் தொழிலாளர்கள் அதிகப்படியாக வசித்து வரும் கோவன்டியில் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தினசரி உணவு வழங்கும் முயற்சியை தொடங்கினார். வெற்றிகரமாக இதுவரை சுமார் 9 லட்ச மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இதுகுறித்து தி பிரிட்ஜ் உடன் நடந்த உரையாடலில் அவர் பகிர்ந்ததாவது, " லாக் டவுன் காரணமாக என்னுடைய உணவகம் மூடப்பட்ட நிலையில், பேஸ்புக் மூலம் எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை வெளிப்படுத்தி வந்தேன். அப்போது தான் எனக்கு மிக எளிதாக கிடைக்கும் வசதிகளை உணர்நதேன். மேலும் பலர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வேளை உணவுக்காக போராடி வருவதையும் உணர்ந்தேன். அப்போது தொடங்கிய சிறு யோசனை மற்றும் பலரின் ஆலோசனைகள் மூலமாக தொடங்கியதே இந்த ஃபீடிங் ஃபிரம் ஃபார் முயற்சி."
மார்ச் 27 தொடங்கப்பட்ட இந்த பிரமாண்டமான முயற்சி ஆறு மாதங்கள் கடந்து சிறப்பாக தொடர்கிறது. " கோவன்டியை சேர்ந்த திரு. சஜித் கான் இந்த முயற்சியின் மூலக் காரணமாகும். அதன் பிறகு தன்னார்வலர்களுடன் இணைந்து அங்கு பணியாற்றினோம். இது தாராவியை விட ஜன நெரிசல் அதிகமாக இடமாகும். இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் தினக்கூலி வேலைகளுக்கு செல்பவர்கள். அதனால் அவர்களுக்கு லாக்டவுனால் உணவு தட்டுபாடு நிச்சயம் ஏற்படும். குறுகிய காலத்தில் 250 நபர்கள் எங்கள் குழுவில் இணைந்து ஒன்றாக பணியாற்ற ஆரம்பித்து கோவன்டி மக்களின் இன்னல்களை போக்க முயற்சி செய்தோம்," எனக் கூறினார். பன்ட்டின் குழு துரிதமாக தங்களது சமையலறை திட்டத்தை செயல்படுத்த தொடங்கினர். ஆரம்ப காலத்தில் சில இடர்பாடுகள் இருந்தன அவர்களுக்கு, இருந்தாலும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் தங்களது வேலையை தொடங்கினர். ஒரு நாளைக்கு 7000 மக்கள் உண்ணும் அளவிலான உணவு தயாரிக்க வேண்டிய அவசியம்.
"கிட்டத்தட்ட 10 பேக்கரிகளை ஒன்றிணைத்து தினமும் 58000 பாவ்களை தயாரித்தோம். தினமும் சத்து அதிகம் உள்ள நமது இந்திய உணவு வகைகளை தயாரித்தோம். 45 நாட்களில் 4.5 லட்ச மக்களுக்கு உணவளித்தோம்," என்றார். இதன் மூலம் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தார்கள். ஆனால் தொடர்ந்து சில இடர்பாடுகளும் வந்து கொண்டிருந்தன, ஆட்கள் மற்றும் நேர பற்றாக்குறை காரணமாக சமையல் செய்வதை தவிர்த்து மக்களுக்கு உணவு தயாரிக்க தேவையான ரேஷன் பொருட்களை வாரம் ஒரு முறை வழங்க ஆரம்பித்தனர். "ஒவ்வொரு முறையும் தாங்கள் ரேஷன் பொருட்களை வழங்கும் போது அது ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ஏழு நாட்களுக்கு போதுமான அளவே வழங்கினோம்." அதில் அரிசி, கோதுமை உட்பட மற்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கோவன்டி மக்களின் கருத்துக்கு ஏற்பவே முடிவு செய்யப்பட்டது. இதற்கெல்லாம் பல பிரபலங்கள் உதவி செய்தனர், தற்போதும் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.
இந்த உயர்ந்த செயல்களை கவனித்த ஆர் சி பி அணி நிர்வாகம் இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் கவுரவிக்கும் விதமாக தங்களது வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயர்களை பதித்தது. மேலும் இறுதியில் இவை அனைத்தும் ஏலம் விடப்பட்டு அந்த பணம் கிவ் இந்தியா பவுண்டேசன் அமைப்புக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தது. " ஏபி டி வில்லியர்ஸ் ஜெர்சியில் எனது பெயரை பார்க்க மிகவும் பெருமிதமாக இருந்தது. இதன்மூலம் எங்களது இந்த திட்டத்தை பலரும் கவனித்து மேலும் பல தேவையான மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். அத்தோடு நான் டி வில்லியர்ஸ் உடன் பேசிய போது அவர் என்னை மிகவும் பாராட்டினார்," என முடித்து கொண்டார் பன்ட். இந்த ஃபீடிங் ஃபிரம் ஃபார் திட்டம் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது, உங்களின் உதவி அவர்களை மேலும் நிறைய மக்களுக்கு உதவி செய்ய உறுதுணையாக இருக்கும். இந்த சோதனை கால நேரத்தில் உங்களின் சிறு உதவியும் பலருக்கு பெறும் உதவியாக முடியும், எனவே இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு முடிந்த உதவிகளை நாமும் மனமுவந்து செய்யலாமே.
மேலும் படிக்க: ஐபிஎல் தொடரில் கலக்கும் ஒரே பெண் பிசியோதெரபிஸ்ட் அனுஜா !