அண்மை செய்திகள்
உலகக் கோப்பை அறிமுகம் முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை: ஹர்மன்பிரீத் கவுர் பர்த் டே ஸ்பெஷல்
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இன்று இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஹர்மன்பிரீத் குறித்த டாப் 10 விஷயங்களை பார்ப்போம்.
- ஹர்மன்பிரீத் கவுர் தனது ஒருநாள் மற்றும் டி20 அறிமுக ஆட்டங்களை ஐசிசி உலகக் கோப்பையில் தான் விளையாடினார்.
- 2012ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மித்தாலி ராஜ் காயம் காரணமாக பங்கேற்காததால், முதல் முறையாக கேப்டன் பதவியை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர். அந்தப் போட்டியில் இந்திய அணியை வெற்றிப் பெற செய்து கோப்பையை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர்.
- 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது பந்துவீச்சில் அசத்திய ஹர்மன்பிரீத் கவுர் மொத்தமாக 9 விக்கெட்களை வீழ்த்தினார். அந்தப் போட்டியை இந்தியா வெல்ல ஹர்மன்பிரீத் பந்துவீச்சு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
- 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஷ் மகளிர் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியாவிலிருந்து பிக்பாஷ் தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.
- அதேபோல 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் டி20 லீக் தொடருக்கு சர்ரே அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்து டி20 தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீராங்கனையும் இவர்தான்.
6. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் இவர் 171 ரன்கள் விளாசினார். உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
7. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.
8. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் முதல் இந்திய மகளிர் கேப்டன் இவர்தான்.
9. தனது பிறந்தநாள் அன்று ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்படும் முதல் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான்.
10. 2009ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி முதல் தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடி வரும் ஹர்மன்பிரீத் கவுர், தனது 10 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நேற்றுடன் நிறைவு செய்துள்ளார்.
இத்தனை சாதனைகளை புரிந்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தனது பிறந்தநாள் அன்று இந்திய அணிக்கு முதல் டி20 உலகக் கோப்பையை பெற்று தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு நாம் அனைவரும் நமது வாழ்த்துகளை தெரிவிப்போம்.