அண்மை செய்திகள்
“டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தயார்” - இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி
2020 மகளிர் டி-20 உலகக் கோப்பை இறுதி போட்டி வரும் மார்ச் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன
இதற்கு முன்பு, சிட்னியில் அரை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. போட்டி தினத்தன்று சிட்னியில் காலையிலிருந்து மழை பெய்து வந்ததால் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த சீசன் லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்ததால், ஐசிசி விதிகளின்படி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளின் இரண்டாவது பாதியில் மழை இல்லாததால், மற்றுமொரு அரை இறுதிப்போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்க அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிப் பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி, “நடக்க வேண்டியது நிச்சயமாக நடக்கும். லீக் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதால், இப்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளோம். அரை இறுதிப்போட்டி தடைப்பட வேண்டும் என்றிருந்திருக்கிறது. அதனால், அப்படி நடந்துள்ளது. இந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தோம். இப்போது அது நடந்துள்ளதால், இனி இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
மகளிர் தினத்தன்று போட்டி நடைபெற உள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2020 மகளிர் டி-20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதியுள்ளன. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே பலமான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.