அண்மை செய்திகள்
மகளிர் டி-20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் சுழல் மங்கைகள்
2020 மகளிர் டி-20 உலகக் கோப்பை இறுதி போட்டி வரும் மார்ச் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன
இதற்கு முன்பு, சிட்னியில் அரை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. போட்டி தினத்தன்று சிட்னியில் காலையிலிருந்து மழை பெய்து வந்ததால் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த சீசன் லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்ததால், ஐசிசி விதிகளின்படி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளின் இரண்டாவது பாதியில் மழை இல்லாததால், மற்றுமொரு அரை இறுதிப்போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்க அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிப் பெற்றுள்ளது.
இந்த சீசனில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளையும் வென்றது. முதல் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்திருந்த இந்திய அணி, கடைசி போட்டியில் மட்டுமே சேஸிங் செய்தது. பேட்டிங்கை பொறுத்தவரை ஷாபாலி ஷர்மா மட்டும் அதிரடியாக விளையாடி வருகிறார்.
உண்மையில், இந்த சீசனில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர்களின் விக்கெட்டுகள் அதிகம் உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பூனம் யாதவும், இலங்கைக்கு எதிரான போட்டியில் ராதா யாதவும் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினர்
2020 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் அசத்திய சுழல் மங்கைகள்
பூனம் யாதவ்
உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்த பூனம் யாதவ், சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட தொடங்கியவர். கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டிருந்த பூனம் யாதவுக்கு அவரது உயரம் தடையாய் அமைந்திருந்தது. ஆனால், உயரம் குறைவு என்பதை தகர்த்தெறிந்த அவர், இந்திய கிரிக்கெட்டில் முக்கியமான சுழற்பந்துவீச்சாளராக தடம் பதித்துள்ளார்.
2013-ம் ஆண்டு சர்வதேச டி-20 போட்டியில் அறிமுகமானார் பூனம். தற்போதைய மகளிர் இந்திய கிரிக்கெட் அணியில், அனுபவம் வாய்ந்த பவுலராக முன்னிலையில் உள்ளார் பூனம். இந்த சீசனில் ஃபார்மில் இருக்கும் அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அணியின் வெற்றிக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராதா யாதவ்
இலங்கைக்கு எதிரான போட்டியில், சமாரி அட்டப்பட்டு ரன்கள் சேர்த்து கொண்டிருந்தார். சிறப்பாக பந்துவீசிய ராதா யாதவ், முதலில் கேப்டன் சமாரியின் விக்கெட்டை வீழ்த்தினார். அதோடு, தொடர்ந்து இலங்கை அணியை ரன் எடுக்கவிடாமல் பந்துவீசினார். இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர், போட்டியின் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்
இறுதிப்போட்டியில் இந்திய அணியின் சுழல் அட்டாக்கில், இந்த இரண்டு வீராங்கனைகளின் பங்கு முக்கியமாக இருக்கும். சர்வதேச டி-20 உலகக் கோப்பையில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி கோப்பையை வெல்ல சுழல் மங்கைகளின் பங்கு பெரிதாக இருக்கும்.