அண்மை செய்திகள்
1,99,477 ஓட்டுகள்,1 விருது! இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு கிடைத்த அங்கீகாரம்
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன்
ராணி ராம்பாலுக்கு ‘வேர்ல்ட் கேம்ஸ் அத்லட் ஆஃப் தி இயர் 2019’ என்ற விருது
வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ஹாக்கி
கூட்டமைப்பு ராணி ராம்பாலின் பெயரை இந்த விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.
மொத்தம் 25 வீரர் வீராங்கனைகள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்கள். இதில், மொத்தம் 1,99,477 வாக்குகள் பெற்று ராணி ராம்பால் விருதை தட்டிச் சென்றுள்ளார்.
இது குறித்து செய்தி
வெளியிட்டுள்ள சர்வதேச உலக விளையாட்டுகளின் அமைப்பு, “‘வேர்ல்ட் கேம்ஸ் அத்லட் ஆஃப் தி இயர் 2019’ விருதை பெற்றிருக்கும் ராணி
ராம்பாலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த போட்டியில், அவர் மொத்தம் 1,99,477
வாக்குகள் பெற்றுள்ளார். விரைவில் அவருக்கான விருதும், பரிசும் வழங்கப்படும்” என
ட்வீட் செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம்பால்
என்பவருக்கு மகளாக பிறந்த ராணி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த
சூழலை பொருட்படுத்தாது தனது 6 வயதில் ஹாக்கி விளையாட ஆரம்பித்தவர், இப்போது இந்திய
ஹாக்கியின் முடிசூடா ராணியாக உயர்ந்து நிற்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 2020 ஒலிம்பிக் தகுதி போட்டியில் ராணி ராம்பால் அடித்த ஒரு கோல் இந்திய அணிக்கு மீண்டும் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்று தந்துள்ளது. தனது 25 வயதிற்குள் இந்திய அணிக்காக 200 போட்டிகளுக்கு மேலாக விளையாடியுள்ளார். அத்துடன் 130 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். இப்படி 10 ஆண்டு காலமாக இந்திய ஹாக்கியை தாங்கிப்பிடிப்பவருக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் ஏற்புடையது.
வாழ்த்துக்கள் ராணி ராம்பால்!