அண்மை செய்திகள்
அனுமதி இல்லாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய கபடி அணிக்கு சிக்கலா?

7-வது சர்க்கிள் ஸ்டைல் உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இதில் பங்கேற்பதற்காக இந்திய கபடி அணி நேற்று வாகா எல்லை வழியாக லாகூருக்கு சென்றது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தியா சார்பில் அணிகள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு சென்றால் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால் இந்த போட்டிக்கு இந்திய கபடி அணி எந்தவித அனுமதியும் பெறாமல் சென்றுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய அமெச்சூர் கபடி சம்மேளன நிர்வாகி எஸ்.பி.கார்க், "‘பாகிஸ்தானுக்கு கபடி அணி சென்றது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. நாங்கள் எந்த கபடி அணிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் ஒரு போதும்ஆதரிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது"எனத் தெரிவித்தார்.
இந்திய அரசின் விதிகளின்படி ஒரு விளையாட்டு அணி வெளிநாட்டிற்கு சென்று போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அந்த அணி சார்பில் உள்ள விளையாட்டு சங்கம் அனுமதியை பெற வேண்டும். இந்தக் கபடி அணி அப்படி ஒரு அனுமதியை பெறததால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
சர்க்கிள் ஸ்டையில் கபடியில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து தோன்றியது. இந்த ஸ்டையில் கபடியில் இரு அணிகளிலிருந்தும் 8 வீரர்கள் பங்கேற்பார்கள். இந்தப் போட்டி ஒரு வட்டமான மைதானத்தில் நடைபெறும். இதில் ஒரு ரெய்டில் ரெய்டி செல்லும் வீரர் எதிரணியில் இருக்கும் வீரர்களில் ஒருவரை மட்டுமே தொட முடியும். அதற்கு ஒரு புள்ளி வழங்கப்படும். ஆனால் அவுட் ஆகும் வீரர் ஆட்டத்திலிருந்து வெளியே செல்ல தேவையில்லை. அதேபோல ரெய்டிற்கு வரும் வீரர் 'கபடி கபடி' என்ற முழக்கத்தை சொல்ல தேவையில்லை.
இந்தப் பிரிவில் உலகக் கோப்பை தொடர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. இதுவரை நடைபெற்றுள்ள 6 உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றுள்ளது. 7ஆவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.