அண்மை செய்திகள்
ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்கும் இந்திய வீரர் வீராங்கனைகள்

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.
நான்காவது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன், கிர்கிஸ்தான் நூர்சுல்தானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் விகாஷ் கிருஷ்ணன் போட்டியை வென்றார். இதன் மூலம், காலிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார்
இதே போல, 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நமன் தன்வார் போட்டியிட்டார். இந்த போட்டியில், சிரியாவின் அல்தின் கெளசூன் 5-0 என்ற கணக்கில் நமனை தோற்கடித்தார். ஜோர்டனில் தொடங்கிய 2020 ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவுக்கு இதுவே முதல் தோல்வி.
இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), சாக்ஷி (57 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார், 63 கிலோ எடைப்பிரிவில் மனிஷ் கவுசிக், 81 கிலோ எடைப்பிரிவில் சச்சின் குமார் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதிக்கு முன்னேறியுள்ள வீரர் வீராங்கனைகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்வார்கள்.
ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் விவரம்:
இந்திய வீரர்கள்: அமித் பங்கல் (52 கிலோ), கவுரவ் சோலாங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ)), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ)), நமன் தன்வார் (91 கிலோ)), சதிஷ் குமார் (91+ கிலோ)
இந்திய வீராங்கனைகள்: மேரி கோம் (51 கிலோ), சாக்ஷி (57 கிலோ), சிம்ரன்ஜித் (60 கிலோ), லோவ்லினா (69 கிலோ), பூஜா (75 கிலோ)