அண்மை செய்திகள்
பயிற்சிக்கு வந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனைக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து மீண்டும் பயிற்சியை தொடங்க இந்திய பேட்மிண்டன் சங்கம் முடிவு எடுத்தது. இதற்காக தெலங்கானா அரசிடம் ஹைதராபாத்தில் பயிற்சி பெற அனுமதி கோரி இருந்தது. தெலங்கானா அரசு கடந்த 1ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து கடந்த 5ஆம் தேதி முதல் பேட்மிண்டன் வீரர் வீராங்கனைகள் கோபிசந்த் அகாடமியில் பயிற்சியை தொடங்கினர். இந்நிலையில் அங்கு பயிற்சிக்கு வந்த வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் இந்திய பேட்மிண்டன் அணியின் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனை சிக்கி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் பிசியோதெரபிஸ்ட் கிரணிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களின் வீடுகளிலிருந்து தினமும் பயிற்சிக்கு வந்துள்ளனர்.
இந்த பரிசோதனை முடிவிற்கு பிறகு கோபிசந்த் அகாடமி தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கி ரெட்டி மற்றும் பயிற்சியாளர் கிரண் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இவர்களுடன் சேர்ந்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர்கள் சாய் பிரணீத், ஶ்ரீகாந்த் ஆகியோரும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனைத்து வித நடைமுறைகளையும் பின்பற்றி மீண்டும் பயிற்சி தொடங்கும் என்று பேட்மிண்டன் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.