அண்மை செய்திகள்
அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் இந்திய தடகளத்தின் தங்க மங்கை பி டி உஷா
இந்திய தடகளத்தின் முடிசூடா ராணி யார் என்றால், எந்தவித சந்தேகமும் இல்லாமல் அனைவரும் கூறும் ஒரு பெயர் பி டி உஷா தான். இந்தியாவின் தங்க மங்கை, ஒவ்வொரு வீராங்கனைக்கும் சிறந்த முன்னுதாரனம். அவரின் பறக்கும் வேகம் கண்டு ஆச்சரியம் அடையாதவர்களே இல்லை எனக்கூறலாம். இதனாலே அவருக்கு பாயொலி எக்ஸ்பிரஸ் என்ற பெயரும் உண்டு.
இதுவரை மொத்தமாக 101 பதக்கங்களை வென்று குவித்துள்ள அவர், தனது மிகப்பெரிய சாதனையை 1985ல் இந்தோனேஷியாவில் நடந்த ஏசியன் ட்ராக் & ஃபீல்ட் சாம்பியன்ஸிப்பில் நிகழ்த்தினார். அதில் தான் கலந்து கொண்ட 100மீ, 200மீ, 400மீ, 400மீ ஹர்டில்ஸ் மற்றும் 4×400மீ ரிலே என அனைத்து ஓட்டங்களிலும் தங்கப்பதக்கம் வென்று உலக பெண்கள் தடகள வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவரையே சேறும். இதை 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார். இதேபோல் இவர் படைத்த பல சாதனைகளை கெளரவிக்கும் விதமாக பத்மஶ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளை வழங்கியது இந்திய அரசாங்கம்.
விளையாட்டில் இருந்து ஒய்வு பெற்றபிறகு அத்துடன் நில்லாமல் புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் தொடர்ந்து இந்திய தடகளத்திற்கு தனது சேவையினை அளித்து வருகிறார். உஷா ஸ்கூல் ஆஃப் அத்லடிக்ஸ் என்ற பெயரில் அகாடமி ஒன்று 2002ல் தொடங்கி வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு சிறந்த பயிற்சி, உணவு, தங்குமிடம் என அனைத்தையும் இலவசமாக வழங்கிவருகிறார். இதற்காகும் செலவுகளை சமாளிக்க பல இடங்களில் தொடர்ந்து நிதித்திரட்டி வருகிறார். க்ரெட்ஃபன்டிங் எனப்படும் முறையில் கிட்டத்தட்ட 20லட்சத்திற்கும் மேலாக நிதி சேகரித்துள்ளார். இதோடு இல்லாமல் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இன்போசிஸ் சுதா மூர்த்தி 20 லட்சம் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மத்திய, மாநில அரசுகளும் உதவிசெய்துள்ளது.
தற்போது அகாடமியில் 16 வீரர்களுக்கு பயிற்சி அளித்து வரும் இவரது தினசரி நாள் அதிகாலை 5 30க்கு தொடங்கும். நீண்ட நெடிய பயிற்சிகள் மாலை 6 மணி வரை தொடரும். விளையாட்டு மட்டுமின்றி வீரர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தனது வாழ்க்கை முழுவதும் இந்திய தடகளத்தின் நலனுக்காக அர்ப்பணித்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும் சிறந்த உதவிகள் கிடைத்து, அகாடமியில் உள்ள அனைத்து மாணவர்களும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.