அண்மை செய்திகள்
ஃபைனலில் இந்தியா ஏமாற்றம்...மகளிர் டி-20 உலகக் கோப்பையை 5-வது முறையாக வென்றது ஆஸி.,
ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மார்ச்-8 சர்வதேச மகளிர் தினமான இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதற்கு முன்பு, சிட்னியில் அரை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. போட்டி தினத்தன்று சிட்னியில் காலையிலிருந்து மழை பெய்து வந்ததால் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த சீசன் லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்ததால், ஐசிசி விதிகளின்படி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதல் முறையாக டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றம். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் தேர்வு செய்தது
ஓப்பனிங் பேட்ஸ்வுமன்களான அலிசா ஹீலி, பெத் மூனியின் அதிரடியால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் உயர்ந்தது. பேட்ஸ்வுமன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். அலிசா ஹீலி (75), பெத் மூனி (78) ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் எடுத்தது.
கடினமான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே சறுக்கல். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாபாலி வெர்மா, ஸ்கட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்திய அணி தடுமாற தொடங்கியது.
ஒன் டவுன் களமிறங்கிய தானியா பாடியா காயம் காரணமாக வெளியேறினார். அடுத்தடுத்து வந்து பேட்ஸ்வுமன்களான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய பேட்ஸ்வுமன்களை பொறுத்தவரை தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி மட்டும் நிதானமாக ரன் சேர்த்தனர். ஆனால், நீண்ட நேரம் அவர்களாலும் களத்தில் நீடிக்க முடியவில்லை
இறுதிப்போட்டி போன்ற பெரிய போட்டியில் விளையாடும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக தொடக்கத்திலிருந்த சொதப்பியது இந்திய அணி. இதனால், 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணி 99 ரன்கள் எடுத்தது. அஸ்திரேலியாவின் ஸ்கட் 4 விக்கெட்டுகளும், ஜோனாசென் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால், 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது
2018 டி-20 உலகக் கோப்பையை தொடர்ந்து, இந்த சீசனிலும் கோப்பையை தக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ஐந்தாவது முறையாக சர்வதேச மகளிர் டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.