அண்மை செய்திகள்
மகளிர் டி20 உலகக்கோப்பையில் எதிர்பார்ப்பின்றி சிறப்பாக பெர்ஃபாம் செய்த வீராங்கனைகள்
ஏழாவது முறையாக நடந்து முடிந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையினை, இந்தியாவினை வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி. இந்த உலகக்கோப்பை முழுவதும் பல சிறந்த ஆட்டங்கள், பல மெய் சிலிர்க்கும் பெர்ஃபாமன்ஸ்கள் இருந்துள்ளன. இவற்றில் சில யாரும் எதிர்பாராத வீராங்கனைகளால் நிகழ்த்தப்பட்டது. அவர்களில் சில முதன்மை வீராங்கனைகளை காண்போம்:
பெத் மூனி:
ஆஸ்திரேலியா அணியின் அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர். அனைவர் கவனமும் அலீஸா ஹீலி, மெக் லான்னிங், எலைஸ் பெர்ரி போன்ற ஜாம்பவான்கள் பக்கம் இருக்க, எந்த சத்தமும் இல்லாமல் ரன்களை குவித்துள்ளார் பெத். இடதுகை மட்டையாளரான இவர் தொடர் முழுவதும் 259 ரன்கள் குவித்து, உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சிறப்பம்சமாக மிக முக்கியமான இறுதிப்போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து 78 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க உதவினார்.
ஹெய்லெ ஜென்சென்:
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான இவர் அணிக்கு எப்போதெல்லாம் ஒரு விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் தவறாமல் ஒரு விக்கெட் எடுத்துக்கொடுத்துள்ளார். சராசரியாக இந்த உலகக்கோப்பையில் கிட்டத்தட்ட தான் வீசிய 2 ஓவர்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் ரன்கள் அடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
சமாரி அட்டபட்டு:
ஶ்ரீலங்கா அணியின் முதுகெலும்பு. கேப்டன், தொடக்க ஆட்டக்காரர் என பல பொருப்புகளை திறம்பட செய்பவர்.இந்த தொடர் முழுவதும் மிகவும் நல்ல ஃபார்மில் இருந்துள்ளார். தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் குறைந்தது 30 ரன்களாவது அடித்து அசத்தியிருந்தார். தங்களது லீக் போட்டிகளின் முடிவில் 154 ரன்கள் குவித்திருந்தார்.