அண்மை செய்திகள்
கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை: பதக்க மழையில் நனைந்த இந்திய சிறுமிகள்

சுவிடன் நாட்டில் கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் பெண்களுக்காக இளைஞர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் நடத்தப்பட்டன. இது கடந்த மாதம் 31ஆம் தேதி முதல் தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சிறுமிகள் பதக்க மழையில் நனைந்தனர்.
இந்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தமாக இந்திய அணி இரு பிரிவுகளிலும் சேர்த்து 14 பதக்கங்களை வென்று அசத்தியது. அத்துடன் இப் போட்டியில் பங்கேற்ற அணிகளில் சிறந்த அணி என்ற பட்டத்தையும் இந்திய அணி வென்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 75 நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் பங்கேற்றனர். அதில் இந்திய சிறுமிகள் அசத்தி பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜூனியர் பெண்கள் பிரிவில் இந்திய அணி 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றது. ஜூனியர் பிரிவில் பிராச்சி தன்கர்(50 கிலோ எடைப் பிரிவு), சானு வங்ஜம்(54 கிலோ எடைப் பிரிவு), லசு யாதவ்(66 கிலோ எடைப் பிரிவு), மகி ராகவ்(80 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர். ஹரியானாவைச் சேர்ந்த பிராச்சி தன்கர் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனை என்ற பட்டத்தையும் பெற்றார்.
மேலும் ஜான்வி சூரி(46 கிலோ எடைப் பிரிவு), ரூடி லால்மிங்மௌனி(66 கிலோ எடைப் பிரிவு), தனிஷ்கா பாட்டீல்(80 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் வெள்ளிப் பத்தக்கம் வென்றனர். தியா நெகி(60 கிலோ எடைப் பிரிவில்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
இளைஞர் பிரிவில் இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் 4 வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. இதில் 54 கிலோ எடைப் பிரிவில் மஸ்கன் தங்கப்பதக்கம் வென்றார். சன்யா நெகி(57 கிலோ எடைப் பிரிவு), தீபிகா(64 கிலோ எடைப் பிரிவு) , மஸ்கன்(69 கிலோ எடைப் பிரிவு), சாக்ஷி ஜக்டாலே(75 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.
இந்தியாவில் மேரி கோமின் குத்துச் சண்டை சாதனைக்குப் பிறகு தற்போது அதிகளவில் பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். அதற்கு உலக அரங்கில் அவர்கள் வெல்லும் பதக்கங்களே ஒரு நல்ல சான்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் எத்தனை சிறுமிகள் அடுத்த குத்துச் சண்டை நாயகிகளாக வலம் வருவார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.