அண்மை செய்திகள்
‘அப்போ தமிழ்நாடு, இப்போ கேரளா’ - மகளிர் கால்பந்து லீக் கோப்பையை தக்க வைத்த தென்னிந்திய அணி
பெங்களூருவில் கடந்த ஜனவரி 24-ம் தேதி தொடங்கிய மகளிர் கால்பந்து லீக், இன்று
இறுதிக்கட்டத்தை எட்டியது. மகாராஷ்டிரா, மணிப்பூர், குஜராத், ஒரிஸா, கோவா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல அணிகள்
இத்தொடரில் பங்கேற்றிருந்தன.
இன்று நடந்த இறுதிப்போட்டியில், கேராளா
கோகுலம் எஃப்.சி - க்ரிப்ஸா அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில், 2-3 என்ற
கோல் கணக்கில் கேரளா கோகுலம் அணி வெற்றி பெற்றது.
போட்டி தொடக்கத்திலேயே பரமேஷ்வோரி தேவி, கமலா தேவியின் இரண்டு கோல்களால் கேரளா அணி முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், க்ரிப்ஸா அணியின் டாங்மெய் கிரேஸின் முதல் கோலால் போட்டி பரபரப்பானது. அவரை தொடர்ந்து, ரத்னாபாலா அடுத்த கோல் அடிக்க 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
கடைசியில், கேரளா கோகுலம் அணியின்
சபித்ரா பந்தாரி மூன்றாவது கோல் அடித்து கேரளாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன்
மூலம், மகளிர் கால்பந்து லீகின் கோப்பையை முதல் முறையாக கேரளா கோகுலம் அணி
கைப்பற்றி அசத்தியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்.சி அணி – மணிப்பூர் போலீஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
இப்போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் சேது எஃப்.சி அணி
அதிரடியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த ஆண்டு போல, இம்முறையும் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. தொடர் முடிவில், இம்முறையும்
தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் அணி, கோப்பையை தக்க வைத்துள்ளது.