அண்மை செய்திகள்
டேபிள் டென்னிஸ்: முதல் சர்வதேச தொடரிலேயே வெண்கலப் பதக்கம் வென்ற சென்னை சிறுமி

சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனையான ஹன்சினி மதன், பங்கேற்ற முதல் சர்வதேச தொடரிலேயே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
10 வயதேயான ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஹன்சினி மதன், சர்வதேச டேபிள் டென்னிஸ் ஜூனியர் தொடரில் பதக்கம் வென்றுள்ளார். ஸ்வீடனில் நடைபெற்ற வரும் ஐடிடிஎஃப் ஜுனியர் டேபிள் டென்னிஸ் தொடரின் ஹன்சினி பங்கேற்றுள்ளார். இத்தொடரின் அரை இறுதி வரை முன்னேறிய அவர், ரஷ்ய வீராங்கனை ஐயூலியா புகோவ்கினாவுக்கு எதிரான போட்டியில் 12-10, 9-11, 5-11, 8-11 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியுற்றார். இதனால், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சிறு வயதிலேயே டேபிள் டென்னிஸில் அசத்தி வரும் இந்த இளம் வீராங்கனை, இன்னும் நிறைய சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். பயிற்சியாளர் முரளிதரன் ராவ் தலைமையில் பயிற்சி எடுத்து வரும் ஹன்சினி, தான் பங்கேற்ற முதல் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரிலேயே பதக்கம் வென்றுள்ளது அவருக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது.