அண்மை செய்திகள்
பேட்மிண்டன்: ஆண்டு முழுவதும் போட்டிகள் ரத்தா? காரணம் என்ன?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் நீடித்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலால் மீண்டும் விளையாட்டு போட்டிகளை கட்டுபாடுகளுடன் தொடங்கவதில் அதிக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் இன்னும் ஒரு சில கட்டுபாடுகளை விதித்து கொண்டுதான் வருகின்றன.
அந்தவகையில் சீன அரசு நேற்று விளையாட்டு போட்டிகள் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப் போட்டிகள் தவிர மற்ற போட்டிகள் எதுவும் இந்தாண்டு இறுதி வரை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடைபெற இருந்த பிடபிள்யூ வேர்ல்ட் டூர் ஃபைனல் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பேட்மிண்டன் உலகில் அதிக செலவுடன் நடைபெறும் தொடராகும். அத்துடன் இதன் பரிசு தொகையும் மிகவும் அதிகமானதாகும். இது ரத்தானால் பேட்மிண்டன் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமையும்.
அதேபோல சீனாவில் நடைபெற இருந்த சீன ஓபன் சூப்பர்-1000 தொடர், ஃபூசோவ் சீனா ஓபன் சூப்பர் 750 தொடர் ஆகிய தொடர்களும் ரத்தாகின்றன. இதனால் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ள பேட்மிண்டன் போட்டிகள் மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
சர்வதேச பேட்மிண்டன் சங்கம் வரும் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத் ஓபன் தொடர் மூலம் மீண்டும் பேட்மிண்டன் தொடரை தொடங்க நினைத்தது. எனினும் இதனை நடத்த போட்டி அமைப்பாளர்கள் விரும்பாததால் இத் தொடர் ரத்தாகி உள்ளது. மேலும் சீன மாஸ்டர்ஸ், டச்சு (நெதர்லாந்து)ஓபன் ஆகிய தொடர்களும் ரத்தாகியுள்ளன. இதனால் 2020 ஆண்டும் முழுவதும் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் குறைவாகியுள்ளன. இந்தச் செய்தி பேட்மிண்டன் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.