அண்மை செய்திகள்
டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்ற ஆட்டோ டிரைவர் மகள்
12 வயதுக்குட்பட்டோருக்கான ரமேஷ் தேசாய் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்
மகாராஷ்டிராவில் நடைபெற்றது. இத்தொடரில், ஆட்டோ டிரைவரின் 11 வயதேயான மகளான தானியா
இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், நானிகா ரெட்டி - தானியா
மோதினர். இப்போட்டியில் 6-2, 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் தானியா போட்டியை வென்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மட்டுமின்றி, இரட்டையர் பிரிவு போட்டியிலும்
தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
நானிகா ரெட்டியுடன் ஜோடி சேர்ந்த தானியா, 7-5, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் திவ்யா - அக்ருத்தி இணையை தோற்கடித்தனர். அசத்தலாக விளையாடிய தானியாவின் விளையாட்டுப் பயணம் அசாதராணமானது.
தானியாவின் தந்தை சாம்சன், ஆட்டோ ஓட்டுனர். சிறு வயதிலேயே டென்னிஸில் ஆர்வம்
கொண்டிருந்த தானியா, மாநில மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் தரவரிசையில்
முன்னேற்றம் கண்டார். தானியாவின் திறமையை கண்டறிந்த டென்னிஸ் நட்சத்திரம்
சானியாவின் தாயார், அவருக்கு உதவு முன்வந்துள்ளார்
சானியா மிர்சா டென்னிஸ் அகாடமியில் பயிற்சி எடுத்துக்கொள்ள தானியா சேர்க்கப்பட்டார்.
சிறப்பான பயிற்சி எடுத்து கொண்ட அவர், இப்போது டென்னிஸ் விளையாட்டில் அசத்தி
வருகிறார்.
“நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர். என் மகனும் மகளும்
டென்னிஸில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர், திறமையானவர்களும் கூட. ஆனால், அவர்களின்
பயிற்சிக்கு என்னால் செலவு செய்ய முடியவில்லை. தானியாவின் திறமையை கண்டறிந்த
சானியா மிர்சா டென்னிஸ் அகாடமி அதிகாரிகள் அவளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த உபாசனா, சானியா அவர்களின் உதவியால் தானியா இப்போது
சாதித்து வருகிறாள்” என நெகிழ்ச்சியடைந்தார் தானியாவின் தந்தை சாம்சன்