செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் ஹாக்கி: ஒலிம்பிக் ஆண்டில் இந்திய அணியின் தரவரிசை முன்னேற்றம் பதக்கத்திற்கான அறிகுறியா?

ஹாக்கி: ஒலிம்பிக் ஆண்டில் இந்திய அணியின் தரவரிசை முன்னேற்றம் பதக்கத்திற்கான அறிகுறியா?

1928 முதல் 1956ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 6 ஒலிம்பிக் ஹாக்கி தங்கப்பதக்கங்களை வென்று இந்தியா சாதனைப் படைத்தது.

ஹாக்கி விளையாட்டில் வேறு எந்த அணியும் செலுத்தாத ஆதிக்கத்தை இந்திய அணி ஒரு காலத்தில் செலுத்தி வந்தது. குறிப்பாக 1928 முதல் 1956ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 6 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்று இந்தியா சாதனைப் படைத்தது. அத்துடன் தொடர்ச்சியாக 30 ஒலிம்பிக் போட்டிகளில் வென்று இந்திய அணி மற்றொரு இமாலய சாதனையை படைத்தது. 

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி இதுவரை 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வாசுதேவன் பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. அதன்பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு பதக்கம் கிடைக்கவில்லை. 

கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு காரணம் இந்திய அணியின் தற்போதைய சிறப்பான செயல்பாடு தான். 

இந்திய ஹாக்கி அணி

இந்திய அணி தனது முதல் புரோ லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. அதன்பின்னர் பெல்ஜியம் அணியை வீழ்த்தியது. மேலும் ஆஸ்திரேலிய அணியிடம் ஒரு போட்டியை டிரா செய்தது. இவ்வாறு சமீபத்திய இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இதன்காரணமாக புதிதாக மாற்றியமைக்கப்பட்ட தரவரிசை விதிகளின்படி நேற்று சர்வதேச ஹாக்கி அணிகள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பாக ஜொலித்து வரும் இந்திய அணி 4ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. சர்வதேச ஹாக்கி தரவரிசை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. 

அப்போது முதல் இந்திய அணி பெற்ற அதிகபட்ச தரவரிசை இதுவே ஆகும். இப்பட்டியலில் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு அடுத்தப்படியாக இந்திய அணி இடம் பிடித்துள்ளது. ஹாக்கி விளையாட்டில் தற்போது உள்ள முன்னணி அணிகள் இந்தியாவும் ஒன்றாக இணைந்துள்ளது. 

ஹாக்கி

இதன்காரணமாக 40 ஆண்டுகாலம் எட்டாமல் இருக்கும் ஒலிம்பிக் பதக்கம் இம்முறை இந்திய அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்திய அணி புரோ லீக் தொடரில் வெளிப்படுத்தி வரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கம் வெல்வது எளிதாக நடந்து விடும். இந்திய அணியின் இந்த திடீர் எழுச்சிக் காரணம் அவர்களது சிறப்பான உடற்தகுதியும் நேர்த்தியான ஆட்டமும் தான். இந்திய வீரர்கள் தற்போது ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிகரான உடற்தகுதியை பெற்றுள்ளனர்.

அத்துடன் இந்திய அணியின் சராசரி வயது ஏறக்குறைய 26-28க்குள் தான் இருக்கும். மேலும் அணியில் இருக்கும் வீரர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய இடத்திற்கு போட்டி போட்டு கொள்வதால் இந்திய அணி மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இவை மட்டுமின்றி இந்திய அணியில் அடுத்த சிறப்பு உலக தரம் வாய்ந்த இரண்டு கோல் கீப்பர்கள் தான். பி.ஆர்.ஶ்ரீஜேஷ் மற்றும் கிருஷ்ணன் பதக் சிறப்பான கோல் கீப்பிங்கை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பல போட்டிகள் இந்திய பின்கள ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் கோலாக மாறாமல் தடுத்து வருகின்றனர். அதிலும் அனுபவ வீரர் ஶ்ரீஜேஷ் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை சரியாக காப்பாற்றி வருகிறார். அவருக்கு பதக் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது ஹாக்கி விளையாட்டில் மீண்டும் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா உருவாகி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

‘பொங்கல் டெஸ்ட்’ – 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு!

பண்டிகை நாட்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் பலர் பண்டிகை விடுமுறையில் நேரடியாக கிரிக்கெட் பார்க்க ஆசையுடன் செல்வார்கள். இவ்வாறு பண்டிகை விடுமுறைகளை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்....