சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
Home அண்மை செய்திகள் சென்னையின் எப் சி அணியிலிருந்து விடைபெற்றார் ஜேஜே லால்பெக்லுவா

சென்னையின் எப் சி அணியிலிருந்து விடைபெற்றார் ஜேஜே லால்பெக்லுவா

சென்னையின் எப் சி அணிக்காக 6 சீசனில் 23 கோல்கள் அடித்துள்ளார்

சென்னையின் எப் சி அணியின் வரலாற்றில் முக்கியமான வீரர்கள் என்று பார்த்தால் நிச்சயமாக ஜேஜே லால்பெக்லுவா என்ற பெயர் இருக்கும். ஐ எஸ் எல் தொடரின் முதல் சீசனிலிருந்து சென்னையின் அணியுடன் இருக்கும் இவர் அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்னையின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாக ஐ எஸ் எல் தொடரின் புதிய சீசனில் சென்னையின் அணிக்காக ஆடபோவதில்லை என ஜேஜே தனது டிவிட்டர் பக்கம் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியதாவது, ” சென்னையின் எப் சி அணியில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஐ எஸ் எல் தொடரில் எனக்கு முதன்முதலில் வாய்ப்பளித்த அணி இது, அதன் மூலமாகவே நான் இந்தளவிற்கு முன்னேறியுள்ளேன்,”எனக் கூறினார். மேலும், எந்த சூழ்நிலையிலும் தனக்கு மிகவும் ஊக்கமளித்த அணியின் உரிமையாளர்களான அபிஷேக் பச்சன் மற்றும் விட்டா டானி ஆகியோருக்கும் மிகுந்த நன்றி கூறியுள்ளார். சென்னையின் அணிக்காக இரண்டு கோப்பைகளை வென்றது மிகவும் பெருமைக்குரிய விஷயம் எனவும் தனக்கு வாய்ப்பளித்த அனைத்து மேனஜர்களுக்கும், தன்னுடன் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ஒரு அணியின் ரசிகர்கள் தான் அவர்களுக்கு உயிர் மூச்சு எனவும், அவர்களுக்காக விளையாடியதில் மிகவும் பெருமை அடைகிறேன் எனவும் கூறினார். சூப்பர் மச்சான்ஸ் மற்றும் பி ஸ்டாண்ட் ப்ளூஸ் அமைப்புகளுக்கு சிறப்பு நன்றி எனக் கூறியுள்ளார். சென்னையின் எப் சி அணிக்காக 6 சீசனில் 23 கோல்கள் மற்றும் 7 அஸிஸ்ட்டுகளை செய்துள்ளார் மிசோ ஸ்னைப்பர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜேஜே. 2011 ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் 56 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் கடந்த ஒரு வருடமாக காயம் காரணமாக இவர் எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக சென்னையின் எப் சி அணிக்காக மேலும் ஒரேயொரு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என முடித்தார்.

‘குண்டாக இருக்கிறீர்கள்’ என்று சொல்லப்பட்ட பல் மருத்துவர் பவர் லிஃப்டிங்கில் சாம்பியனான எழுச்சிப் பயணம் !

ஆர்த்தி அருண் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பவுர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தங்கம் வென்று அசத்தினார்.
பெண்கள் பலர் சாதிக்க திருமணம் மற்றும் குழந்தைகள் தடையாக இருப்பார்கள் என்ற போலி நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நம்பிக்கை போலியானது தான் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆர்த்தி அருணின் வெற்றிப் பயணம் அமைந்துள்ளது. யார் இந்த ஆர்த்தி அருண்? அப்படி இவர் என்ன செய்தார்? தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 வயதான ஆர்த்தி அருண் ஒரு பல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்...