கிரிக்கெட்
ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை: சமாளித்த இந்திய அணி, ஆஸி. அணிக்கு 132 ரன்கள் இலக்கு
ஐசிசி மகளிருக்கான கிரிக்கெட் டி-20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. சிட்னியில் தொடங்கிய முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி ஓப்பனிங் பேட்ஸ்வுமன்கள் ஸ்மிரிதி மந்தானா, ஷஃபாலி வெர்மா களமிறங்கினர். முதலில் பேட்டிங் என்பதால், ஓப்பனிங் பேட்ஸ்வுமன்கள் நல்ல ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வெர்மா, பவுண்டரிகளை பறக்கவிட்டார். நிதானமாக விளையாடிய ஸ்மிரிதி மந்தானா, எதிர்பாராதவிதமாக ஜொனாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
10 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டு ஸ்மிரிதி வெளியேறினார், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்வுமன் ஆட்டமிழந்தது அதிர்ச்சி கொடுத்தாலும், அடுத்து இளம் வீராங்கனை ஜெமிமா ராட்ரிக்ஸ் களமிறங்கினார். 5 ஓவர்கள் முடிவில் 42/1 என இந்திய அணி களத்தில் இருந்தது.
ஆனால், எல்லீஸ் பெர்ரியின் அடுத்த ஓவரிலேயே ஷஃபாலி வெர்மா கேட்ச் கொடுத்து அவுட்டானார். 29 ரன்களுக்கு ஷஃபாலி வெளியேற, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் களமிறங்கினார். ஸ்மிரிதியின் விக்கெட்டை பதம்பார்த்த அதே ஜோனாசென் ஓவரில் ஹர்மன்பிரீத் கவுரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி தந்தார். 2 ரன்களுக்கு கவுர் ஆட்டமிழக்க, தீப்தி ஷர்மா பேட்டிங் களமிறங்கினார்
ஜெமிமா - தீப்தி இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 53 ரன்களுக்கு ஜோடி சேர்ந்த இந்த இணை, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 26 ரன்கள் எடுத்திருந்தபோது கிம்மின்ஸ் பந்துவீச்சில் ஜெமிமா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தி தீப்தியோடு களத்தில் நிற்க, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 132 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில், தீப்தியின் அதிகபட்ச ஸ்கோர் இது.
தொடக்கத்தில் சொதப்பினாலும், 20 ஓவர்களில் சமாளித்து ரன் சேர்த்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது