கிரிக்கெட்
ஆஸி.க்கு எதிரான உலகக் கோப்பை டி20 முதல் போட்டி என் வாழ்வில் முக்கியமான போட்டி: ஜெமிமா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. நேற்று முடிந்த ஆஸ்திரேலிய முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் இந்த முத்தரப்புத் தொடரில் இந்திய அணி சற்று சிறப்பாக தான் விளையாடியது.
டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி வரும் 21ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது. அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளனர். முத்தரப்புத் தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுமா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டி குறித்து இந்திய அணியின் முக்கிய வீராங்கனைகளுள் ஒருவரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி எனது வாழ்வில் மிகவும் முக்கியமான போட்டி. உலகக் கோப்பையில் விளையாடுவது அதிலும் முதல் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எனக்கு இது முதல் உலகக் கோப்பை தொடர். இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடினால் அது எப்போதும் சவாலாக இருக்கும். ஆகவே இந்த முதல் போட்டிக்கு நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்போட்டி குறித்து இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஷிகா பாண்டே, "முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட நாங்கள் ஆவலுடன் உள்ளோனம். இது உலகக் கோப்பை தொடர் என்பதால் சிறந்த அணிகள் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொள்ள உள்ளன. எனவே இந்தத் தொடரில் அதிக சவால்கள் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
அதேபோல இப்போட்டி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு வீராங்கனையும் டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பந்துவீச்சாளருமான மேகன் ஸ்ட், "இந்திய அணியில் மிகவும் சிறப்பான வீராங்கனை ஸ்மிருதி மந்தானா. இவர் பலமுறை என் பந்துகளை சர்வதேச மற்றும் பிபிஎல் லீக் போட்டிகளில் சிக்சருக்கு விரட்டியுள்ளார். அத்துடன் தற்போது ஸ்மிருதி மந்தானா நல்ல ஃபார்மிலும் உள்ளார். எனவே அவர் எங்களுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுப்பார். மேலும் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் ஒரு சிறந்த வீராங்கனை. அவர் எப்போது வேண்டுமானாலும் களமிறங்கி தனியாக ஆட்டத்தை மாற்றக் கூடியவர்" எனக் கூறியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அப்போது செய்த தவறுகளை இம்முறை திருத்தி கொண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மகளிர் டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் கிரிக்கெட் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.