பேட்மிண்டன்
பி.பி.எல்லில் தொடர்ந்து மூன்றாவது வெற்றி... பெங்களூருவை வென்ற சென்னை
பிரீமியர் பேட்மிண்டன் லீகின் சென்னை லெக் போட்டிகள் நேற்றுடன் முடிந்தது. கடைசி நாள் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் - பெங்களூரு ரப்டர்ஸ் அணிகள் மோதின
ஏற்கனவே, முதல் இரண்டு டைகளை வென்றிருந்த சென்னை அணியின் வெற்றி நேற்றைய
போட்டியிலும் தொடர்ந்தது. ஹோம் கிரவுண்ட் உற்சாகத்தை பயன்படுத்திக் கொண்ட சென்னை
வீரர் வீராங்கனைகள், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 4-3 என்ற கணக்கில் வெற்றி
பெற்றனர்.
முதலில் தொடங்கிய கலப்பு இரட்டையர் பிரிவு சென்னைக்கு சாதகமாக அமையவில்லை. கபிலா - புக் ஜோடி பெங்களூருவின் பி.எஸ் சன், ஈ.எச் வன் ஆகியோரிடம் 7-15, 8-15 என நேர் செட் கணக்கில் தோற்றது. இதனால் முன்னிலை வகித்த பெங்களூரு அணிக்கு அடுத்து வந்த சென்னை வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டு போட்டிகளையும் சென்னை வீரர்கள் வென்றனர்.
முதலில், சென்னையின் சுகிர்தா 15-13, 10-15, 15-11 என்ற செட் கணக்கில்
பெங்களூருவின் பிரணீத்தை தோற்கடித்தார்
அடுத்து களமிறங்கிய சென்னையின் நம்பிக்கை நட்சத்திரம் லக்ஷயா சென், 15-5,
15-4 என்ற நேர் செட் கணக்கில் லெவெர்டெஸை வென்றார். இதனால், 3-2 என சென்னை அணி
முன்னிலை வகித்தது.
அடுத்து நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய காயத்ரி கோபிசந்த்
இம்முறையும் சோபிக்கவில்லை. பெங்களூருவின் யிங்கிற்கு எதிரான போட்டியில் 15-13,
6-15, 6-15 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
கடைசி போட்டியான ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், சென்னையின் சாத்விக், கபிலா இணை சிறப்பாக விளையாடினர். 13-15, 15-9, 15-9 என்ற செட் கணக்கில் பெங்களூருவின் சன், சபுத்ரா இணையை வென்று சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதனால், 4-3 என சென்னை அணி பெங்களூருவுக்கு எதிரான டையை வென்றது. இதுவரை 15
போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 போட்டிகளில் வெற்றியும், 3 டிரம்ப் கேம்
போட்டிகளையும் வென்று 13 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த போட்டிகள் முடிவடைந்த நிலையில்,
அடுத்து லக்னோ பாபு பனாரசி தஸ் யூ.பி பேட்மிண்டன் அகாடெமியில் போட்டிகள் நடைபெற
உள்ளன.