முத்தரப்புத் தொடர்: எலிசா பெரி ஆல் ரவுண்ட் ஆட்டத்தால் வீழ்ந்தது இந்திய அணி

Update: 2020-02-02 06:14 GMT

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையேயான போட்டி இன்று கேன்பராவில் நடைபெற்றது. இது முத்தரப்புத் தொடரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியாகும். முதல் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷாபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தானா களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஷாபாலி வர்மா தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

இதனால் இந்திய மகளிர் அணி சற்று தடுமாறியது. எனினும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தானா அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் சேர்த்தனர். ஸ்மிருதி மந்தானா 23 பந்துகளில் 3பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 35 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தானா 1500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் இதனைத் தனது 68ஆவது டி20 போட்டியில் அடித்துள்ளார்.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டே இருந்ததால் இந்திய அணி சற்று தடுமாறியது. 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 58 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (28),பாட்டியா(0), தீப்தி சர்மா(0) என அனைவரும் ஒரே ஓவரில் அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி மிகவும் திணறியது.

எலிசா பெரி

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் எலிசா பெரி 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து 104 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனை ஹீலி(1), மூனி(6) ரன்களுடன் அவுட் ஆகினர்.

இவர்களைத் தொடர்ந்து ஒரளவு சிறப்பாக விளையாடிய கார்ட்னர் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த எலிசா பெரி பந்தைவீச்சைப் போல் பேட்டிங்கிலும் அசத்தினார். ஒரு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் பெரி மட்டும் நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எலிசா பெரி

இவர் 47 பந்துகளில் 8 பவுண்டரிகளின் உதவியுடன் 49 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் அடித்து போட்டியை முடிக்க முயன்ற எலிசா பெரி பவுண்டரிக்கு கொட்டிற்கு அருகே கேட்க் கொடுத்து அவுட் ஆனார்.

மறுமுனையில் வந்த ஹெயன்ஸ்(9), ஜான்சன்(6) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் பெரியின் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு அருகில் அழைத்து சென்றது. இறுதியில் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 104 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன்மூலம் முத்தரப்புத் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா சார்பில் ராஜேஸ்வரி 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஷிகா பாண்டே,தீப்தி சர்மா,ராதா யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முத்தரப்புத் தொடரில் இந்திய அணி அடையும் முதல் தோல்வி இதுவாகும். இந்திய மகளிர் அணி அடுத்து வரும் 7ஆம் தேதி ஆஸ்திரேலிய மகளீர் அணியை மீண்டும் சந்திக்கிறது.