நியூஸி ஹாக்கி தொடரை வெற்றியுடன் முடித்தது இந்திய மகளிர் அணி

Update: 2020-02-05 09:52 GMT

இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஹாக்கி தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வளர்ச்சி அணியை 4-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றது. அதன்பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அணிக்கு எதிராக இந்திய அணி நான்காவது போட்டியில் களமிறங்கியது. அதில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் அடித்த கோலால் 1-0 என்ற கணக்கில் இந்திய வெற்றிப் பெற்றது. இந்நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டியில் இன்று இந்திய மகளிர் அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவனீத் கவுர் கோல் அடித்து 1-0 என இந்திய அணியை முன்னிலை பெற செய்தார்.

இதற்கு பிறகு 54ஆவது நிமிடத்தில் ஸர்மிளா கோல் அடித்து 2-0 என முன்னிலையை உயர்த்தினார். மீண்டும் ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் நவனீத் கவுர் ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை அடைய செய்தார். இந்தியாவின் கோல்களுக்கு நியூசிலாந்து அணி கடைசி வரை ஒரு பதில் கோல் கூட போட முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் இந்தத் தொடரில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வென்றது.

இந்தத் தொடர் குறித்து இந்திய மகளிர்ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜின், "இந்தத் தொடரை இந்திய அணி வெற்றியுடன் முடித்துள்ளது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீராங்கனைகள் 3 கோல் அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது தவறுகளை கண்டறிவதற்கு இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

நாங்கள் தற்போது விளையாடுவதை விட இன்னும் சற்று வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதில் நாங்கள் இனி கவனம் செலுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் அணி நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை வெற்றியுடன் ஆரம்பித்து பின்னர் தோல்விகளை சந்தித்தாலும் இறுதியில் 2 வெற்றிகளுடன் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.