தேசிய துப்பாக்கி சுடுதலில் இரண்டு தங்கம் அசத்திய சிறுமி மனு பாக்கர்

Update: 2020-02-05 05:18 GMT

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகள் மற்றும் வீரர்கள் தேர்வு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் மற்றும் ஜூனியர் பிரிவில் 25 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிற்கான போட்டிகள் நேற்று நடைபெற்றன.

இதில் இந்தியாவின் இளம் நட்சத்திரமான மனு பாக்கர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மனு பாக்கர் பெண்கள் மற்றும் ஜூனியர் பிரிவிற்கான தகுதிச் சுற்றில் 584 புள்ளிகள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

பெண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 32 புள்ளிகள் எடுத்து மனு பாக்கர் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தப் பிரிவில் இரண்டாவதாக அபிதன்யா 28 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். அதேபோல ஜூனியர் பிரிவில் மனு பாக்கர் 30 புள்ளிகள் எடுத்தார். அதிலும் அவர் தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஜூனியர் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த ரிதம் சங்வான் 27 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இதனால் இரு பிரிவுகளிலும் மனு பாக்கர் எளிதாக தங்கம் வென்று அசத்தினார். மனு பாக்கர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையிலும் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி இடத்தை மனு பாக்கர் இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளார். அந்த கோட்டா மூலம் மனு பாக்கரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் மனு பாக்கரின் இந்த அசத்தலான ஃபார்ம் சிறு வயதிலேயே அவருக்கு ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மனு பாக்கரை போன்று ஒலிம்பிக் தகுதி கோட்டா வென்ற மற்றொரு வீராங்கனையான சின்கி யாதவ் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு இரண்டாவது வீராங்கனையாக தகுதிப் பெற்றார். எனினும் இறுதிப் போட்டியில் சற்று பின்னடைவை சந்தித்த சின்கி யாதவ் நான்கவது இடத்தைப் பிடித்தார்.

கடந்த நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர். அந்தச் சாதனை இந்த ஆண்டும் தொடரும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் பதக்க வேTடையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கலாம்.