கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ்: ஒரே நாளில் ஒரு தங்கம் உட்பட 5 பதக்கங்களை அள்ளிய சென்னை பல்கலைக்கழகம் 

Update: 2020-02-29 01:44 GMT

மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் முதல் முறையாக கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இப்போட்டிகளில் நேற்று ஒரே நாளில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற தடகள போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் சென்னை பல்கலை கழகத்தைச் சேர்ந்த ஆர்.ராஜேஷ் 47.36 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆடவர் பிரிவில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் சென்னை பல்கலைக் கழகத்தின் வீரராகவேந்திரா 14.85 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜீவா சரவணன் 3 நிமிடம் 53 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

மகளிர் ஈட்டி ஏறிதல் போட்டியில் சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த என்.ஹேமமாலினி 45.79 மீட்டர் தூரம் ஈட்டி ஏறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹர்ஷினி சரவணன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

சென்னை பல்கலைக் கழகம் தவிர நேற்றைய போட்டியில் பளு தூக்குதல் சிறந்து விளங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.லோசந்த் ஆண்கள் 89 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் 276(124+152)கிலோ எடையை தூக்கி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முன்னதாக கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸின் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை பல்கலைக் கழகம் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல பளுதூக்குதலில் தமிழ்செல்வன் மற்றும் அகிலா வெண்கலப் பதக்கம் வென்று இருந்தனர்.