'மேரி கோமிற்காக நான் புறக்கணிக்கப்பட்டேன்' - சரிதா தேவி

Update: 2020-07-21 13:27 GMT

இந்தியாவின் முன்னனி குத்துச்சண்டை வீராங்கனைகளில் ஒருவரான மனிப்பூரினை சேர்ந்த சரிதா தேவியின் கரியரில் மறக்க முடியாத நிகழ்வு 2014இல் இன்ச்சியானில் நடந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் நடந்தது. பதக்க விழாவில் தான் வென்ற வெண்கல பதக்கத்தை யாரும் எதிர்பாராத விதமாக அவர் ஏற்றுக்கொள்ளமறுத்தார். காரணம்? தனக்கு கிடைக்கவிருந்த தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டதாக கருதினார். ஆனால் இதற்காக அவர் கொடுத்த விலை மிகவும் பெரியது. உலகக் குத்துச்சண்டை சம்மேளனம் அவரை சஸ்பெண்ட் செய்தது.

சரிதா தேவியின் கரியரை முழுவதுமாக வெளிப்படுத்தும் விதமாக தற்போது 'ஐ ரைஸ்' என்ற டாகுமென்ட்ரி வெளிவந்துள்ளது. இதில் அந்த நிகழ்ச்சி முழுவதுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு முக்கியம்சமாக சரிதாவுக்கும் இந்தியாவின் மற்றொரு முன்னனி வீராங்கனையான மேரி கோமிற்கும் இடையேயான போட்டிகளும் விவரிக்கப்பட்டுள்ளது. தற்போது வெவ்வேறு இருவரும் பிரிவுகளில் பங்கேற்றாலும், சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் ஒரே எடைப் பிரிவில் தான் பங்கேற்று வந்தனர். போபாலில் நடந்த 2010 ஏசியன் கேம்ஸ் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் சரிதா வெற்றி பெற்ற போதிலும், மேரி கோமின் அப்பீலினால் போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. இந்த போட்டியிலும் சரிதாவே வென்றிருந்தாலும் மேரி கோமே ஏசியன் கேம்ஸ் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தினை அளித்தது.

ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த 'ஐ ரைஸ்' டாகுமென்ட்ரியினை இயக்கியிருப்பவர் மனிப்பூரினை சேர்ந்த இயக்குநர் போரன் தோக்சோம். இதை முழுவதுமாக எடுத்து முடிக்க 5 ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. சரிதா தேவி குறித்து அவர் குறிப்பிடுகையில், சரிதா மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது கடுமையான உழைப்பினால் இந்த சிறப்பான நிலையினை அடைந்துள்ளார். தனது கரியரில் பல சோதனைகளை எதிர்கொண்டாலும், அனைத்தையும் தகர்த்து மேலே வந்துள்ளார். இதனாலே இந்த டாகுமென்ட்ரியின் பெயர் ஐ ரைஸ் என தேர்ந்தெடுக்கப்பட்டது என கூறியுள்ளார். சரிதா தேவிக்கு அவர் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக 2009இல் அர்ஜுனா விருதினை இந்திய அரசாங்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.