தேசிய பயிற்சி முகாமில் இருக்கும் சைக்கிளிங் வீராங்கனைக்கு கொரோனா உறுதி

Update: 2020-08-16 10:25 GMT

நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டு வர அனைவரும் போராடி வரும் நிலையில் விளையாட்டு வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கனவே விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகின்றது வருத்தமளிக்கும் ஒன்றாகும்.

தற்போது இந்திய சைக்கிளிங் வீராங்கனையான திரியாசா பால் இதில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய மைதானத்தில் நடக்கவிருந்த தேசிய சைக்கிளிங் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்திருந்த அவருக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் அறிக்கையின் படி கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளதாகும், திரியாசாவிற்கு மைதானத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு நடந்த ஏசியன் டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில், மகளிர் ஜூனியர் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.