பேட்மிண்டன் தரவரிசை: முதல் முறையாக டாப் 10ல் சாய் பிரணீத்

Update: 2020-02-18 14:46 GMT

சர்வதேச பேட்மிண்டன் வீரர் மற்றும் வீராங்கனைகள் தரவரிசையை சர்வதேச பேட்மிண்டன் சங்கம் இன்று வெளியிட்டது. அதில் இந்தியாவின் சாய் பிரணீத் ஒரு இடம் முன்னேறி முதல் முறையாக டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.

கடந்த தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் 11 ஆவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று வெளியான புதிய தரவரிசையின்படி சாய் பிரணீத் 10ஆவது இடத்திற்கு முன்னேறினார். மேலும் தற்போது நடந்து முடிந்த ஆசியக் குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய லக்‌ஷ்யா சென் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

அதன்படி முன்பாக 31ஆவது இடத்தில் இருந்த லக்‌ஷ்யா சென் இன்று வெளியாகியுள்ள தரவரிசையில் 28ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர்கள் தவிர மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஶ்ரீகாந்த் 3 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து கஷ்யப் அதே 25ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தொடர்ந்து 6ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல அனுபவ வீராங்கனையான சாய்னா நேவால் 18ஆவது இடத்தில் தொடர்கிறார். மகளிர் பிரிவில் முதல் 50 இடங்களுக்குள் சிந்து மற்றும் சாய்னா மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு பிறகு 74 இடத்தில் முகுதா அக்ரேவும், 80ஆவது இடத்தில் அஸ்மிதா சாலிஹாவும் உள்ளனர்.

ஸ்பெயின் நகரில் இன்று முதல் ஸ்பெயின் மாஸ்ட்ரஸ் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆடவர் அணி ஆசியக் குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு தற்போது இத் தொடரில் பங்கேற்க உள்ளது.

ஆடவர் பிரிவில் சாய் பிரணீத் மற்றும் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாக போகும் இரண்டாவது வீரர் வீராங்கனை யார் என்ற சந்தேகத்திற்கு இன்னும் விடைக் கிடைக்கவில்லை. ஆடவர் பிரிவில் லக்‌ஷ்யா சென், ஶ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனினும் மகளிர் பிரிவில் சாய்னா நேவாலின் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக தெரிகிறது.