கொரோனா தொற்று காரணமாக விளையாட்டு விருதுகள் விழாவில் பங்கேற்க முடியாத வீரர்கள்

Update: 2020-08-28 06:06 GMT

தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று நடக்கவிருக்கும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில், முன்னணி பேட்மிண்டன் வீராரன சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி உட்பட மூன்று வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தேசிய விளையாட்டு ஆணையமான சாய் அறிவித்துள்ளது. இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்‌. முதன் முறையாக முற்றிலுமாக ஆன்லைன் மூலமாக நடக்கவிருக்கும் இவ்விழாவில் இந்த வருடம் விருது பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 74 வீரர்களில் 65 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 7 பிரிவுகளில் 74 விருதுகள் தேசிய விளையாட்டு தினத்தில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் தான் அதிகப்படியான கேல் ரத்னா விருது (5) மற்றும் அர்ஜூனா விருது (27) வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரரான மாரியப்பன் தங்கவேலுவும் இந்த வருடம் கேல் ரத்னா விருது பெறுபவர்களில்‌ ஒருவராவார். இவ்விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசு மாளிகையில் இருக்கும், விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விக்ஞான் பவணிலிருந்தும் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள். மேலும் இவ்விழா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பப்டும்.