2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள்! - கணிப்பு முடிவுகள்

Update: 2020-01-28 17:27 GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஒலிம்பிக் தொடருக்கான

தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், எந்தெந்த நாடுகள்

எத்தனை பத்தங்களை வெல்லும் என்ற கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கிரேஸ்நோட் என்ற நிறுவனம் நடத்திய கணிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்கள், உலக சாம்பியன்ஷிப், உலக கோப்பை தொடர்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 12 பதக்கங்களுடன் இந்தியா 23-வது இடத்தை பிடிக்கும் என்ற அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பதக்க கணிப்பு உண்மையாகுமா என்பது ஒலிம்பிக் தொடரின் போதே தெரிய வரும்.

துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் விளையாட்டுகளில் இந்திய

வீரர் வீராங்கனைகள் உலக கோப்பைகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால், உலக

சாம்பியன்ஷிப் தொடரில் அசத்துபவர்கள் ஒலிம்பிக்கிலும் நிச்சயமாக பதக்கம்

வெல்வார்கள் என்பது உறுதி இல்லை.

உதாரணமாக, 2012 ஒலிம்பிக் தொடரின்போது இந்தியாவின் தீபிகா குமாரி வில்வித்தை உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். மேலும், உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஆனால், ஒலிம்பிக் தொடரில் தீபிகா குமாரி சோபிக்காதது ஏமாற்றம் அளித்தது.

இதே போல, 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீரர்

ஜீத்து ராய் கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என்று எதிர்ப்பர்ர்கப்பட்டது. அதுவும்

ஏமாற்றத்தில் முடிந்தது.

எனவே, நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகளை வைத்து எதிர்பார்க்க முடியாது என்றபோதும், தோராயமாக பதக்க எண்ணிக்கையை கணக்கிட முடியும். அந்த வகையில், இந்தியாவுக்கு 12 பதக்கங்களோ, அதற்கும் அதிகமான பதக்கங்களோ கிடைத்தால் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.