சீனியர்களை பின்னுக்குத் தள்ளிய 18 வயது சோனம் மாலிக், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு தேர்ச்சி!

Update: 2020-02-26 14:22 GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மல்யுத்தம் விளையாட்டுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாக்‌ஷி மாலிக்கை இளம் வீராங்கனை சோனம் மாலிக் தோற்கடித்துள்ளார்.

மகளிருக்கான மல்யுத்த போட்டிகளுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சார்பில் யார் பங்கேற்க இருக்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. அதற்கான தேர்ச்சி போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், 18 வயதேயான இளம் வீராங்கனை சோனம் மாலிக் சீனியர் வீராங்கனைகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

62 கிலோ எடைப்பிரிவில் ராதிகா, சரிதா மோர் என சீனியர்களை வீழ்த்திய சோனம், இறுதிப்போட்டியில் சாக்‌ஷி மாலிக்கை வென்றார். சாக்‌ஷி - சோனம் மோதிய இதற்கு முந்தைய போட்டியிலும் சோனம் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், மல்யுத்த விளையாட்டுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் இந்தியா சார்பில் சோனம் பங்கேற்க உள்ளார். இன்றைய தோல்வியினால், ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சாக்‌ஷி இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிட்டத்தட்ட பங்கேற்க முடியாத இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விளையாட்டு நிறுவனத்தில், பயிற்சியாளர் அஜ்மீர் மாலிக்கின் தலைமையில் சோனம் பயிற்சி பெற்று வருகிறார்.

இதே போல, 76 கிலோ எடைப்பிரிவில் கிரண் இறுதிப்போட்டியை வென்றார். அடுத்து, ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் தொடர் மார்ச் 27- 29 வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவர்.