2020 ஒலிம்பிக்: இதுவரை தேர்ச்சி பெற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள்..!

Update: 2020-01-17 06:12 GMT

ஜப்பானில் நடைபெற இருக்கும் 2020 ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே பதக்கங்களுடன் வெளியேறிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 67வது இடத்தைப் பிடித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் தொடரின்போது எத்தனை பதக்கங்களை குவிக்க உள்ளனர் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் 2020 ஜனவரி 15 வரையிலான தகுதிச்சுற்று போட்டி முடிவுகளின் அடிப்படையில், 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்ற இந்திய அணி வீரர் வீராங்கனைகளின் விவரம் பின் வருமாறு:

வில்வித்தை

2016 ரியோ ஒலிம்பிக் தொடரில், ஆண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவில் விளையாட இந்திய அணி தேர்ச்சி பெறவில்லை. ஆனால், நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2019 உலக வில்வித்தை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 2020 டோக்கியோ கனவை உறுதி செய்துள்ளனர்.

அதானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகிய வீரர்கள் 2019 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்றனர். சீனாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 2-6 என சரிந்த இந்திய அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது.

இதே போல, பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 2020 ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

மல்யுத்தம்

மல்யுத்தம் விளையாட்டைச் சேர்ந்த வினேஷ் போகட்தான், 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் இந்திய வீராங்கனை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக மல்யுத்த தொடரில் முன்னணி வீராங்கனை சாரவை தோற்கடித்த வினேஷ், 2020 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தேர்ச்சி பெற்றார். ஆனால், உலக மல்யுத்த தொடரில் வினேஷ் போகத்துக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

அவரைப் போலவே, உலக மல்யுத்த தொடர் ஆண்களுக்கான பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜரங் பூனியா, 2020 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்தார்.

ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சிப்பெற்றுள்ளார்.

மேலும், உலக ஜூனியர் மல்யுத்த தொடரில் ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இருபது வயதேயான தீபக் பூனியா 2020 ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

தடகளம்

20 கிமீ நடைப்போட்டி

கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய நடைப்போட்டி 20 கிமீ பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த இந்தியாவின் கொலோத்தும் தொடி இர்ஃபான், 2020 ஒலிம்பிக் தொடர் நடைப்போட்டிக்கு தகுதிப்பெற்ற ஒரே இந்திய வீரரானார்.

4x100 மீட்டர் கலப்பு ரிலே

2019 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஏழாவது இடத்தை பிடித்த இந்திய அணி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. முகமது அனாஸ், விஸ்மயா, கிருஷ்ணா மேத்யூ, நோவா நிர்மல் ஆகியோர் கொண்ட அணி தகுதிப்பெற்றுள்ளது

தடையோட்டம்

3000 மீட்டர் தடையோட்டம் போட்டிக்கு, இந்தியாவைச் சேர்ந்த அவினாஷ் சாபில் தகுதிப்பெற்றுள்ளார். 2019 உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின்போது, 8:21:37 நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து அசத்தினார் அவினாஷ்.

ஈட்டி எறிதல்

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளுக்கு பிறகு இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதற்கு இவர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இப்போது மீண்டும் களத்துக்கு திரும்பியுள்ளார். 2020 ஜனவரி மாதம், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஏ.என்.சி.சி. தடகள போட்டியில் களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் தனது முதல் முயற்சியில் 81.6 மீட்டர் தூரம் வீசினார். தனது இரண்டாவது முயற்சியில் 82 மீட்டர் தூரம் வீசினார். அடுத்த முயற்சியில் 82.57 மீட்டர் தூரம் வீசினார். இறுதியாக அவரது நான்காவது முயற்சியில் 87.86 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். அவர் இறுதியாக வீசிய 87.86 மீட்டர் தூரத்தின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி தூரமான 85 மீட்டரை கடந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

துப்பாக்கிச் சுடுதல்

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப் தொடர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த அன்ஜும் மொடுகில், நான்காவது இடம் பிடித்த அபூர்வி சந்தேலா ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்று உள்ளனர்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள்

துப்பாக்கிச் சுடுதல் வீரர் தீபக் குமார். 17 வயதேயான திவ்யான்ஷ் சிங் பண்வார் ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்

இந்தியாவைச் சேர்ந்த அபிஷேக் வர்மா மற்றும் 16 வயதேயான சவுரப் சவுத்ரி ஆகியோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்

இப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனைகள் மனு பக்கர், யஸ்கஸ்வினி சிங் தேஸ்வால் ஆகியோர் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பதை உறுதி செய்துள்ளனர்

பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல்

2019 உலக துப்பாக்கிச் சுடுதல் தொடரில் தங்கம் வென்ற ராஹி சர்னோபாத் பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல்

பிரிவில் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிப்பெற்றுள்ளார். இதே போட்டியில், ஆறாவது இடத்தை பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனையான சிங்கி யாதவ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புட், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் ஆகியோர் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே விளையாட்டின் மகளிர் பிரிவில், தேஜஸ்வினி சாவந்த் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான ஸ்கீட்

துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் ஒரு பிரிவான ஆண்களுக்கான ஸ்கீட் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அங்கத் வீர் சிங் பஜ்வா மற்றும் மைராஜ் அகமது கான் ஆகியோர் ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஹாக்கி

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஹாக்கி போட்டிக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரை வென்றது இந்தியா. புவனேஷ்வர் கலிங்கா மைதானத்தில் நடந்த தகுதிச்சுற்று தொடரில், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் வெற்றியை ஈட்டிய இந்திய அணியினர் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் விளையாடிய ஹாக்கி இந்திய மகளிர் அணி, இப்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கும் தேர்ச்சி பெற்றதன்மூலம், முதல் முறையாக அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளனர்.

குதிரையேற்றம் (ஈக்வெஸ்ட்ரியன்)

2000 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீரர் ஒலிம்பிக் தொடர் குதிரையேற்றம் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்ற 27 வயதேயான ஃபவுத் மிர்சா, 2020 ஒலிம்பிக்கில் விளையாடுவது உறுதி செய்துள்ளார்.