பஜ்ரங் புனியா,வினேஷ் மல்யுத்த தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

Update: 2020-01-30 05:13 GMT

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலுக்குப் பிறகு இந்திய அணி அதிகமாக பதக்கங்கள் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் விளையாடு மல்யுத்தம். இதில் முக்கியமானவர்களாக பார்க்கப்படுபவர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் ஆகிய இருவர் தான்.

பஜ்ரங் புனியாவிற்கு மல்யுத்த நட்சத்திர வீரர் யோகேஷ்வர் தத் பயிற்சி அளித்து வருகிறார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அத்துடன் பஜ்ரங் புனியா சமீபத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ரோம் ரேங்கிங் சீரிஸ் தொடரில் இவர் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்.

அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, அமெரிக்காவின் ஜோர்டன் ஆலிவரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதற்கு முந்தைய போட்டிகளில் இரு அமெரிக்க வீரர்களையும், ஒரு உக்ரையின் வீரரையும் தோற்கடித்தார். இதன்மூலம் பஜ்ரங் புனியாவிற்கு 16 தரவரிசை புள்ளிகள் கிடைத்தன.

இதன்காரணமாக தற்போது வெளியாகியுள்ள 65 கிலோ மல்யுத்த வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பஜ்ரங் புனியா 4ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் முதலிடத்தில் உள்ள ரஷ்ய வீரர் ரஷிடோவைவிட 19 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

அதேபோல ரோம் ரேங்கிங் சீரிஸ் தொடரில் மகளீர் 53கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் இந்தத் தொடரில் இரண்டு சீன வீராங்கனைகளை தோற்கடித்தார். அத்துடன் இறுதிப் போட்டியில் இக்வேடார் நாட்டின் லூயிசா எலிசபெத்தை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் கிடைத்த புள்ளிகளால் தரவரிசைப் பட்டியலில் வினேஷ் போகட் 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

எனினும் 53கிலோ எடைப் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கொரியாவின் யோங் மீ பாக்கைவிட வினேஷ் போகட் 19 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். தரவரிசைப் புள்ளிகள் ஒவ்வொரு மல்யுத்த வீரர்களுக்கும் மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் உள்ள மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அந்தப் பிரிவில் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் தான் மோதும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்படும். அது ஒலிம்பிக் மாதிரியான தொடர்களில் மிகவும் முக்கியமானதாக அமையும். மேலும் ஒரு எடைப்பிரிவில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

அடுத்த ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் வெற்றிப் பெறுபவர்களுக்கு 12 புள்ளிகள் மற்றும் அந்தப் பிரிவிலுள்ள மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போனஸ் புள்ளிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.