மகளிர் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இந்தியா?

Update: 2020-03-03 11:46 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இன்று அனைத்து லீக் போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளன. லீக் சுற்றில் முடிவில் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

அதேபோல பி பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. ஆகவே இந்த இரண்டு அணிகளும் தங்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்தனர்.

அந்தவகையில் வரும் 5ஆம் தேதி இந்திய அணி அரையிறுதியில் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மேலும் அன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஒரு லீக் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. அப்போதும் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. அந்த முறையும் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. எனினும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.

எனினும் இம்முறை கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்ததற்கு இந்திய பழிவாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியின் வீராங்கனை பந்துவீச்சில் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். மிடில் ஆர்டர் வீராங்கனைகள் குறிப்பாக கேப்டன் ஹர்மன்பிரீத் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.

மேலும் இந்திய அணி இம்முறை ஒரு தனிநபரை நம்பி இருக்காமல் அணியாக சிறப்பாக விளையாடி வருகிறது. உதாரணமாக இந்திய அணியின் வீராங்கனைகள் யாரும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரை சதம் கடக்கவில்லை. எனினும் இந்திய அணி பேட்டிங்கில் நியூசிலாந்து போட்டி தவிர்த்து மற்ற போட்டிகளில் சிறப்பான ஸ்கோரை எட்டியுள்ளது.

அதேபோல பந்துவீச்சில் முதல் இரண்டு போட்டியில் பூனம் யாதவ் கலக்கினார். அதன்பின்னர் ஷிகா பாண்டே, ராதா யாதவ் உள்ளிட்ட வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். ஆகவே இம்முறை இந்திய அணி ஒரு அணியாக நல்ல ஃபார்மில் உள்ளது. எனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங்கில் மட்டும் சற்று கவனம் செலுத்தினால் இந்திய அணியின் வெற்றி கிட்ட தட்ட உறுதி தான். டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அதிக முறை தோல்வி அடைந்த அணி என்ற தேவையற்ற சாதனையை இந்திய அணி இம்முறை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.