மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூஸிக்கு. எதிரான போட்டியில் த்ரில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

Update: 2020-02-27 06:58 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மெல்பேர்ன் மைதானத்தில் மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 46 ரன்கள் எடுத்தார். மற்ற மிடில் ஆர்டர் வீராங்கனைகள் சொதப்பியதால் இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 58 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 134 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ரேச்சல் ப்ரீஸ்ட் 12 ரன்களுடன் ஷிகா பாண்டேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பேட்ஸூம் 6 ரன்களுக்கு தீப்தி சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 7 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்தது.

பின்னர் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவையினும் பூனம் யாதவ் பந்துவீச்சில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனவே முதல் 10 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற 88 ரன்கள் தேவைப் பட்டது.

இதனைத் தொடர்ந்து மார்ட்டின் மற்றும் கிரீன் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கிரீன் 23 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது.

பின்னர் சிறப்பாக விளையாடி வந்த மார்ட்டினும் 25 ரன்களுக்கு ராதா யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 19ஆவது ஓவரில் கெர்ர் அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகளை விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி வெற்றிக்கு மிகவும் அருகில் சென்றது. இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பிற்கு 1 ரன்கள் எடுத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி பெரும் மூன்றாவது வெற்றியாகும். இதன்மூலம் இந்திய அணி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு நான்காவது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. மேலும் இதுவரை டி20 உலகக் கோப்பையில் 4 முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளது. இதில் இரண்டாவது முறையாக தற்போது இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.