மகளிர் டி20 உலகக் கோப்பை: பங்களாதேஷ் அணியை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி

Update: 2020-02-24 14:13 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஷபாலி வர்மாவின் அதிரடியால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 39, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34, வேதா கிருஷ்ணமூர்த்தி 20 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. இந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீராங்கனை ஷமிமா சுல்தானா 3 ரன்களுடன் ஷிகா பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி 6 ஓவர்களின் முடிவில் 33 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் சிறப்பாக விளையாடி வந்த முர்ஷிதா கட்டூன் 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அருந்ததி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு பங்களாதேஷ் அணி 60 ரன்கள் எடுத்தது.

எனவே கடைசி 10 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 83 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 11ஆவது ஓவரில் பூனம் யாதவ் பந்துவீச்சில் சன்ஜிதா இஸ்லாம் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்காரணமாக பங்களாதேஷ் அணிக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கு அடுத்த ஓவரில் ஃபர்கானா ஹக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து விக்கெட் விழ்ச்சியை சற்றுக் கட்டுபடுத்திய பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி 5 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 49 ரன்கள் தேவைப்பட்டது.

எனினும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மீண்டும் பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்தது. சிறப்பாக விளையாடி வந்த நிகர் சுல்தானா 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் கடந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பூனம் யாதவ் இந்தப் போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தினார்.