மகளிர் டி20 உலகக் கோப்பை: மித்தாலி ராஜ் ஆட்டம் முதல் சாமரி அட்டப்பட்டு அதிரடி வரை இந்தியா-இலங்கை ரீவைண்ட்
நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளையும் வென்று இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள நான்காவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தச் சூழலில் உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்த இரு அணிகள் மோதிய போட்டிகளை சற்று திரும்பி பார்ப்போம்.
2009 டி20 உலகக் கோப்பை: மித்தாலி ராஜ் சிறப்பான ஆட்டம்
2009ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் இலங்கையும் ஒரே பிரிவில் இடம்பெற்றனர். இதனால் இரு அணிகளும் லீக் சுற்றில் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் 18 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் பூனம் ராவத் (30)மற்றும் மித்தாலி ராஜ் (32*)ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இந்திய அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
2010 டி20 உலகக் கோப்பை: டயானா டேவிட் சுழலில் சிக்கிய இலங்கை
இந்த டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா-இலங்கை அணிகள் லீக் சுற்றில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சுலக்சனா நாயக் மற்றும் மித்தாலி ராஜ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தனார். அவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மித்தாலி ராஜ் 52 ரன்களும் சல்க்சனா நாயக் 54 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை டயானா டேவிட்டின் சுழலில் சிக்கி விக்கெட்களை அடுத்தடுத்து பரிகொடுத்தது. டயானா டேவிட் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டும் எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2012 டி20 உலகக் கோப்பை: பிளே ஆஃப் சுற்று
2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற தவறின. இதனால் அடுத்த உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறும் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி ஏக்தா பிஸ்ட் சுழலில் திணறி வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஏக்தா பிஸ்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
2014 டி20 உலகக் கோப்பை: சாமரி அட்டப்பட்டுவின் அபார ஆட்டம்
இந்த டி20 உலகக் கோப்பையில் மீண்டும் இந்தியா-இலங்கை அணிகள் லீக் சுற்றில் மோதின. இம்முறை முதலில் ஆடிய இலங்கை அணியில் சாமரி அட்டப்பட்டு சிறப்பாக விளையாடினார். அவர் 43 ரன்கள் விளாசினார். இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி இலங்கை பந்துவீச்சில் சீராக விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது தான் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடையும் முதல் முறையாகும்.
இதுவரை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய-இலங்கை அணிகள் நான்கு முறை மோதியுள்ளன. அவற்றில் இந்திய அணி 3 மூன்று முறையும் இலங்கை அணி ஒரு முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. தற்போது இந்திய மகளிர் அணிக்கு இருக்கும் ஃபார்மை வைத்து பார்க்கும் போது இந்திய அணி இலங்கையை வீழ்த்தி லீக் சுற்றில் தோல்வி அடையாத அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.